|
சமூகக் கொடுமை
கணவன் வாழ்ந்திருந்த பொழுது மனைவி அருகிலிருந்த நகரத்திற்குச்
சென்று சேவல், பால் முதலியன விற்று வருவாள். இப்பொழுது அவள் அமங்கலியாகிவிட்டாள்.
அவள் தெருவழியே சென்றாள் சகுனத்தடை என்று எல்லோரும் கதவடைத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும்
வரங்கொடுக்கும் தெய்வத்தின் கோயிலுக்கு அவள் சென்றாலே கோயில் பூசாரிகள் கோயிலடைத்துத்
தாழ்ப்பாள் போடுவார்கள். விதவைக்குச்
சொல்ல முடியாத கொடுமைகளை சமூக வழக்கங்களினால்
மக்கள் இழைக்கிறார்கள். கணவன் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைவிட, வரப்போகும் துயர
வாழ்க்கையை எண்ணி அவள் கண்ணீர் பெருக்குகிறாள்.
கும்பத்துப் பால் கொண்டு
கூவாத சாவல் கொண்டு
கோய நதி போனாலும்
கோய நதி பாப்பாரு
கொடுமை பெருத்த
கொடுமையா வாரா
கோயிலைச் சாத்தி
கொக்கி ரெண்டும் போடுமென்பார்
கோயிலுக்கு மேல் புறமா
குயிலி புலம்பிட்டா
கோவில் விரிசல் உடும்
கொக்கி ரெண்டும் பூட்டு உடும்
கோயிலுக்கு கீழ்புறமா
குயிலா புலம்பிட்டா
கொடுமைகளும் வெப்பம் ஆறும்
சருவத்துப் பாலுகொண்டு
சாயாத சாவல் கொண்டு
சாமி நதி போனாலும்
சாமி நதிப் பாப்பாரு
சலித்தவ வரான்னு
சாமியைச் சாத்து மென்பார்
தாழிரண்டும் போடுமென்பார்
சாமிக்கு மேல்புறமா
தங்கா புலம்பிட்டா
கதவு ரெண்டும் பூட்டு உடும்
காலிரெண்டும் நீங்கிவிடும்
சாமிக்கு கீழாக தங்கா புலம்பிட்டா
தங்கா குறை எப்ப ஆறும்.
வட்டார வழக்கு:
சாவல்-சேவல்
;
விரிசல்-உடைப்பு
; உடும்-விடும்.
|
உதவியவர்
:
செல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி |
இடம்:
சேலம் மாவட்டம். |
|