|
வயிற்று வலி தீரவில்லை
தந்தை நெடுநாளாக வயிற்று வலியால் துன்பப்பட்டு பல இடங்களில்
மருத்துவம் பார்க்கிறார். பெரிய பெரிய பண்டிதர்கள் எல்லாம் வைத்தியம் பார்த்தும்
அவருக்குக் குணமடையாமல் இறந்து விடுகிறார். அவர் மறைவுக்கு வருந்தி அவர் மகள் ஒப்பாரி
சொல்லி அழுகிறாள்.
நாட்டு வவுத்து வலி
நாமக்கல்லு பண்டிதம்
நல்ல வழி ஆகுமின்னு
நாடெங்கும் போய்ப் பார்த்தும்
நடுச்சாமி ஆனீங்களா
சீமை வவுத்து வலி
சீரங்கத்துப் பண்டிதம்
தீரு கடை ஆகுமின்னு
சீமையெங்கும் போய்ப் பார்க்க
தீரு கடை ஆகாமே
சொல்லவிச்சுப் போனீங்களா
வட்டார வழக்கு:
வவுத்துவலி-வயிற்றுவலி
; பண்டிதம்-வைத்தியம்
;
தீருகடை-குணமடைதல்.
குறிப்பு
:
இப்பாட்டை உதவிய பாப்பாயியின் தந்தை வயிற்றுவலியால்
மரணமடைந்தார். அவளே அச்சமயம் பாடிய பாடல் இது. அவளுக்குக் கல்வி அறிவு கிடையாது.
|
உதவியவர்
:
பாப்பாயி
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி |
இடம்:
சேலம் மாவட்டம். |
|