|
எட்டு மணி வண்டியேறி-நாங்க
எளம் பசியா வந்தாக்கா
என்னா அடுப்பி லென்பா
எள்ளரிசிச் சாதம் என்பா
சத்திரத்து வாழை-நம்ம வாசலிலே
சரஞ்சரமாய்க் காய்த்தாலும்
முத்தத்து வாழை-நாங்க
முகம் வாடி நிக்கறமே
கள்ளி இடைஞ்சலிலே
கருங்கண்ணினாய் மின்னலிலே
கரும்பா வளர்ந்த மக-நானிப்போ
கவலைக்கு ஆளானேன்.
வேலி இடைஞ்சலிலே
வெள்ளரளிப் பின்னலிலே
வேம்பா வளர்ந்த மக-நானிப்போ
வேதனைக்கு ஆளானேன்
பத்து மலைக்ககு அப்பாலே
பழுத்த கனி வாழை
பழுத்த கனியிழந்தேன்-நானிப்போ
பாசமுள்ள சொல்லிழந்தேன்
தங்க தமிளரிலே
தண்ணீரு கொண்டு வந்தேன்
தண்ணீரு வேண்டாமின்னு
என்னைப் பெத்த அப்பா
தங்க ரதம் கேட்டீயளோ
வெள்ளித் தமிளரிலே
வென்னீரு கொண்டு வந்தேன்
வென்னீரு வேண்டாமின்னு
என்னைப் பெத்த அப்பா
வெள்ளிரதம் கேட்டீயளோ
அண்டா விளக்கி
அரளிப் பூ உள்ளடக்கி
அண்டாக் கவிந்த உடன்
என்னைப் பெத்தார்-நாங்க
அரளிப்பூ வாடினமே.
தாலம் விளக்கி
தாழம் பூ உள்ளடக்கி
தாலம் கவிழ்ந்த உடன்-நாங்க
தாழம் பூ வாடினமே
நாளி மகிழம் பூ
நாகப்பட்டினம் தாழம் பூ
நடந்து வந்து சீர் வாங்க
என்னப் பெத்த அப்பா
நல்ல தவம் பெறலையே
குறுணி மகிழம் பூ
கும்பா வெல்லாம் தாழம் பூ
கொண்டு வந்து சீர்வாங்க-நாங்க
கோடி தவம் செய்ய லையே.
குறிப்பு
:
சத்திரத்து வாழை. இது அவர்களது
சகோதரர்களின் மனைவிமாரைக் குறிக்கும். அவர்கள் வேறிடத்தில் பிறந்து இந்த வீட்டில் வந்து புகுந்தவர்கள். அவர்களைத்தான்
சத்திரத்து வாழை காய்த்துக் குலுங்குகிறது என்று குறிப்பிடுகிறாள். இந்த வீட்டு முற்றத்திலேயே
வளர்ந்த வாழை என்று தன்னைக் கூறிக்கொள்ளுகிறாள்.
|
சேகரித்தவர்
:
S.S. போத்தையா |
இடம்:
விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம். |
|