இலங்கையிலே மாண்டதென்ன?

தந்தை அயலூருக்கு வேலையாகச் சென்றார். அங்கே திடீரென்று நோய் கண்டு மாண்டுவிட்டார். அவருடைய மகள் பெரியவளாகி வீட்டில் இருக்கிறாள். அவளுடைய தம்பி சிறுவன். இவ்வாறு திடீரென்று தங்கள் குடும்பத்தினருக்குக் கேடுவர அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. தமது தோட்டத்திற்கு வரும் மயிலையும் குயிலையும் கூட அவர் விரட்டமாட்டார். இப்படியிருக்க அவருடைய குடும்பத்திற்கு ஏன் கேடு வந்து சேர்ந்தது என்று அவளும் அறிய முடியவில்லை. இவ்வினாக்களை எல்லாம் இறந்தவரைப் பார்த்துக் கேட்டு ஒப்பாரி பாடுகிறாள் மகள்.

பத்துப் பேர் சேவகரும்
பழனிக்கே போகையிலே
பத்துப் பேர் வந்தென்ன?-நீங்க
பழனியிலே மாண்டதென்ன?
எட்டுப் பேர் கூடி
இலஞ்சிக்கே போன தென்ன?
எட்டுப் பேர் வந்த தென்ன?-நீங்க
இலஞ்சியிலே மாண்ட தென்ன?
எட்டுப் பேர் சேவகரும்
இலங்கைக்கே போனதிலே
எட்டுப் பேர் வந்ததென்ன-நீங்க
இலங்கையிலே மாண்ட தென்ன?
கூண்டு வண்டி கட்டி-நீங்க
கோட்டைக்குப் போனாலும்
கும்பா நிழலாடும்-பிடிக்க வந்த பெண்
குயில் போல வாதாடும்.
மாட்டு வண்டி
மந்தைக்கே போனாலும்
மங்கு நிழலாடும்
உங்களைப் பிடிக்க வந்த மென்
மயில் போல வாதாடும்
யானை மேல் ஜமக்காளம்
நம்ம வாசலிலே
அஞ்சு லட்சம் பஞ்சாங்கம்
அருமை மகன் கொள்ளி வைக்க
அருச்சுனர்க்கும் சம்மதமோ
குதிரை மேல் ஜமக்காளம்
நம்ம வாசலிலே
கோடிப் பேர் பஞ்சாங்கம்
குழந்தை மகன் கொள்ளி வைக்க
குடும்பத்திலே சம்மதமோ

செங்கச் சுவரு வைத்து
செவ்வரளித் தோட்டம் வைத்து
சிறு நாயைக் காவலிட்டு-நான்
சீதை சிறையிருந்தேன்
செங்கச் சுவரிழந்து
செவ்வரளித் தோட்டம் அழிந்து
சிறு நாயும் காலொடிஞ்சு-நான்
சீதை கருகறேனே.
மஞ்சக் சுவரு வச்சு
மல்லிகைப் பூத்தோப்பு வச்சு
மர நாயைக் காவலிட்டு-நான்
மாது சிறையிருந்தேன்.
மஞ்சச் சுவரிடிஞ்சு
மல்லிகைப் பூத் தோப்பழிந்சு
மர நாயும் காலொடிஞ்சு-நான்
மாது கருகறேனே
மதுரைத் தலை வாசலிலே
மஞ்சள் பழுத்திருக்கும்
மரமல்லி பூத்திருக்கும்
மறுமல்லி வாசத்திற்கு
மயிலு வந்து கூடு கட்டும்
மயிலை அடுக்கியளோ?
மயில் கூட்டைப் பிச்சியளோ?
மயிலழுத கண்ணீரு-நீங்க பெத்த
மக்கள் மேல் சாடியதோ
கோட்டைத் தலை வாசலிலே
கொன்றை பூத்திருக்கும்
குடமல்லி பூத்திருக்கும்
குடமல்லி வாசகத்துக்கு
குயிலு வந்து கூடு கட்டும்
குயிலை அடிக்கியளோ?
குயில் கூட்டைப் பிச்சியளோ?
குயிலழுத கண்ணீரு-உங்க
குழந்தை மேல் சாடியதோ?

குறிப்பு : இப்பாடல் பாடப்படும் இடங்களுக்கு ஏற்றாற் போல ஊர்களின் பெயர் மாறிவரும்.

குழந்தைமகன் தந்தையை இழந்த கொடுமைக்கு வருந்தி சகோதரி அழுகிறாள்.

தந்தை செய்த பாவங்களுக்கு குழந்தைகள் துன்பப்பட வேண்டும் என்ற கருத்து கிறிஸ்தவ சமயக் கருத்தாகும். இந்து சமய கர்மக் கொள்கையும், சமண மதத்தவரது மறுபிறப்புக் கொள்கையும், அவரவர் செய்த வினைகள் அவரவர் உயிரைத் தான் பற்றிக்கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் சொல்லுகின்றன. ஆனால் சாதாரண மக்கள் தாய் தந்தையரின் வினை குடும்பத்தினரை தாக்கும் என்று நம்புகின்றனர்.

சேகரித்தவர் :
S.S. போத்தையா

இடம்:
விளாத்திக்குளம்,
நெல்லை.