|
அடிக்க வர ராஜாவே
ஐயா சரண மின்னே
எட்டுத் தலைவாசலும்
இருபத்தெட்டு ஆசாரமும்
கொல்ல வரு வாரோ
கொலங் குத்தி பேசுவாரோ
கொல்ல வர ராசாவே
கோடி சரண மின்னே
எட்டரங்காம் மாளிகையாம்
எடுத்தெடுக்கும் தண்டியலாம்
எடுத்தெடுக்கும் தண்டியலை
எதிர்த்திருந்து எய்தானோ
பத்தரங்காம் மாளிகையாம்
பார்த்தெடுக்கும் தண்டியலாம்
பார்த்தெடுக்கும் தண்டியலை
பார்த்திருந்து எய்தானோ
கோடி மாதுளம் பூவாம்
கோட்டாற்றுத் தாழம் பூவாம்
கோடி முடியு மின்னே
குயில் பறந்த மாயமென்ன
பதக்கு மாதலம் பூவாம்
பருவமுள்ள தாழம் பூவாம்
பாத்து முடியுமின்னே
பறந்தோடிப் போனதென்ன
அரங்கு துறந்து
அரளிப் பதி உண்டுபண்ணி
ஆண்டியார் வாழ்வதற்கு
அரும் பெடுத்தும் சாத்தலையே
பொட்டி துறந்து
பூப்பதிகள் உண்டு பண்ணி
பொண்ணடியாள் வாழ்வதற்
பூவெடுத்துச் சாத்தலையே
அல்லிப் போல் பொண்ணும்
அருச்சுனன் போல் மாப்பிள்ளையும்
அல்லி போல் வாழ
அழைத்தார் தஞ்சமின்னே
சீதை போல் பொண்ணும்
ராமர் போல் மாப்பிள்ளையும்
சீதை போல் வாழ
சீமை பொறுக்கலையே
ஆனை அலங்காரம்
அம்பாரிச் சிங்காரம்
ஆனைமேல் பட்டாணி
அம்பு கொண்டு எய்தானோ
குதிரை அலங்காரம்
கூடாரச்சிங்காரம்
குதிரைமேல் பட்டாணி
கொம்பு கொண்டு எய்தானோ.
குறிப்பு
:
இப்பாட்டு
தமிழ் நாட்டில் பட்டாணியரும் கும்பினியாரும் சேர்ந்து மறவர் பாளையங்களை அடக்கிய காலத்தில்
தோன்றியிருக்கலாம். பட்டாணியை வருணிக்கும்பொழுது தற்கால லேவாதேவிக்காரனாக
வருணிக்காமல் ஆனைமேல் அம்பாரி வைத்து ஏறி வருபவனாகவும் கூடாரத்தில் வாழ்பவனாகவும்
வருணித்திருக்கிறது. இது படையெடுத்து வந்த பட்டாணியரையே குறிக்கும், மறவர் பாளையங்களை
அடக்கி வந்த மாபூஸ்கான் கான்சாகிப் ஆகியோர்களைப் பற்றிய நினைவு சிறிது காலத்திற்கு
மறவர் பாளையங்களில் மங்கவில்லை. அதற்கடுத்து இருபது வருடங்களுக்குள்ளாக, கும்பினியார்
ஆட்சி நிலைத்துவிட்டது. இப்பாடலில் இறந்து போனதாகச் சொல்லப்படும் மனிதன் இச் சன்டைகளில்
இறந்தவனாக இருக்கலாம். வழக்கமாகக் கால தூதர் வருகையைக் குறிப்பிடும் ஒப்பாரி
“ஆசார வாசலில் ராஜாக்கள் வந்திறங்க” என்றும், “கொல்ல
வருவாரும் கொலங்குத்திப் பேசுவாரும்” என்றும் கூறகிறது.
எனவே இவனுக்கு ஏற்பட்ட சாவு இயற்கை சாவு அல்ல என்று தோன்றுகிறது. இக் காரணங்களால்,
இப்பாடலின் முக்கிய பகுதிகள் சுமார் 230 வருடங்களுக்கு முன்னால் பாடப்பட்டிருக்க வேண்டும்
என்று கூறலாம்.
|
சேகரித்தவர்
:
S.M. கார்க்கி |
இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|