பக்கம் எண்: - 96 -

இரண்டொரு தொடர்களில் பழிக்கிறார். சிலப்பதிக்காரத்தில் உள்ள முப்பது காதைகளில் (படலங்களில்) ஒரே ஒரு காதையில் பொற்கொல்லனை அமைக்கிறார். அந்தப் பகுதியிலும் இறுதியில் கோவலனின் கொலைக்குக் காரணம் பொற்கொல்லன் அல்ல, ஊழ்வினையே என முடித்துவிடுகிறார்.

கொலைத்தண்டனை தந்து கோவலனுடைய வாழ்வை முடித்த பாண்டிய அரசன்மேல் கொடுமை கூறலாம் என்றால், அவனுடைய குற்றத்தையும் காப்பிய ஆசிரியர் போக்கிவிடுகிறார். கொடுமைக்கு ஆளான கண்ணகியின் வாயாலேயே அவன் தீமை இல்லாதவன் என்று கூறுமாறு செய்துவிடுகிறார். ஆகவே காப்பியம் கொடியவன் இல்லாததாக நிற்கிறது. இவ்வாறு கொடியவன் இல்லாமலே சுவையான காப்பியம் எழுதியதும் ஒரு புதுமையே ஆகும்.

மணிமேகலை

மணிமேகலை என்பது தமிழிலக்கியத்தில் உள்ள இரண்டாம் காப்பியம் எனலாம். கதையின் தொடர்பாலும், அது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சிபோல் உள்ளது. அதனால் இவற்றை இரட்டைக் காப்பியம் எனக் கூறுதல் உண்டு. கோவலனுக்கும் நாட்டியக் கலையரசியான மாதவிக்கும் மகளாகப் பிறந்த மணிமேகலையின் வாழ்வை விளக்கும் காப்பியம் அது. மணிமேகலைக்கு உற்ற வயது வந்தபோது, குலத்தின் வழக்கப்படி அவள் நாட்டியம் கற்றுப் பரத்தையாக வாழவேண்டும் என்று பாட்டியும் மற்றவர்களும் விரும்பினார்கள். ஆனால் அவளுடைய தாய் மாதவியோ, கோவலன் பிரிந்து சென்று மதுரையில் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததுமுதல் துயரமே வடிவாய், கலை வாழ்வைத் துறந்தாள். பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவியான அறவணர் என்பவரை அணுகித் துறவறம் பூண்டாள். தன் மகள் குலத்தொழிலைச் செய்யக்கூடாது என்று உறுதி பூண்டு, அவளுடைய கூந்தலைக் களைந்து சமயத் தொண்டுக்கு உரியவள் ஆக்கினாள். அவளைத் தன் மகள் என்று கூறுவதும் பழியான தொழிலில் கொண்டு போய்ச் சேர்க்கக் கூடும் என்று கருதி, கண்ணகியின் மகள் என்றே சொல்லத் தொடங்கினாள். இவ்வாறு குடும்பத்தைத் துறந்த மணிமேகலையின் வாழ்விலும் இடையூறு புகுந்தது. நாட்டின் இளவரசன் அவளுடைய இளமையழகைக் கண்டு காதல் கொண்டான். அடிக்கடி பின்தொடர்ந்தான். அந்நிலையில் அவளைக் காப்பாற்றக் குலதெய்வம் வந்து உதவியது. அந்தத் தெய்வத்தின் உதவியால் மணிமேகலை மணிபல்லவத் தீவுக்குச் சென்று, புத்தரின் திருவடிகளைக் கண்டு, முன்பிறப்பை உணாந்து, நாட்டுக்குத் திரும்பினாள். அமுதசுரபி என்னும் தெய்விகப் பாத்திரம் பெற்றுப் பலருடைய பசியைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றாள். நாடெங்கும் திரிந்து பசியும் பிணியும் தீர்த்து மக்களுக்கு