vi

அதுமுதல் எந்தையாருக்குத் தம் ஆசிரியர் அவர்களுடைய சரித்திரத்தை
விரிவாக எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று.
குடந்தையிலிருந்து சென்னைக்கு வந்தபின்பு ஒழிந்த காலங்களில் தம்
கருத்தை அவ்வேலையிலே செலுத்திப் பலவகையான குறிப்புக்களை எழுதிச்
சேர்த்தார்கள். இதன்பயனாக ஆசிரியரவர்களது சரித்திரத்தை இரண்டு
பாகங்களாக 1933-34-ஆம் ஆண்டுகளில் பதிப்பித்து வெளியிட்டார்கள்.
அக்காலத்தில் தமிழ் ஆசிரியர்களைப் பற்றிய வரலாறுகளே பெரும்பாலும்
காணப்படாமையால் பிள்ளையவர்களுடைய சரித்திரத்திற்கு மிக்க மதிப்பு
ஏற்பட்டது. பிள்ளையவர்கள் சரித்திரத்தால் பல அருமையான நிகழ்ச்சிகளைத்
தெரிந்து கொண்ட தமிழ் அன்பர்கள் பலருடைய பாராட்டு என்
தந்தையாருக்குக் கிடைத்தது. சரித்திரம் வெளிவந்த பின் பல
பத்திரிகாசிரியர்களின் வேண்டுகோளின்படி சிறு கட்டுரைகள்
எந்தையாரவர்களால் தமிழ் மாதப் பத்திரிகைகளிலும் விசேஷ மலர்களிலும்
எழுதப்பெற்று வந்தன. அவற்றின் வசனநடைக்கு மதிப்பு வரவர
அதிகமாயிற்று.

1935-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 6-ம்Œ எந்தையாரவர்களின்
சதாபிஷேகம் (எண்பதாம் ஆண்டு பூர்த்தி விழா) நடைபெற்றது. அன்று
ராவ்பகதூர் K.V.கிருஷ்ணசாமி ஐயரவர்கள் முதலிய அன்பர்கள் சேர்ந்து
ஸெனேட் மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் ஒரு வாழ்த்துக் கூட்டம்
நடத்தினார்கள். பிள்ளையவர்கள் சரித்திரத்தைப் படித்துப் பார்த்து இன்புற்ற
ஒரு தமிழன்பர் “பிள்ளையவர்கள் சரித்திரமே இவ்வளவு ரசமாயிருக்கிறதே.
ஐயரவர்கள் சரித்திரம் வெளிவந்தால் தமிழ் நாட்டினர்க்கு மிக்க பயன்படுமே”
என்று தம் கருத்தை மட்டும் தெரிவித்துப் பெயரை வெளியிடாமல்
ஐயரவர்கள் சுய சரித்திரப் பதிப்புக்காக ரூ.501 அந்தச் சபையில் அளிக்கச்
செய்தார்.

சதாபிஷேகம் ஆனபிறகு சுயசரிதம் எழுதவேண்டுமென்ற கருத்து
எந்தையாரவர்களுக்கு ஏற்பட்டும் சர்வகலாசாலையார் விரும்பியபடி
குறுந்தொகையைப் பதிப்பிக்க வேண்டுமென்ற வேகம் உண்டாகவே
இடைவிடாது அவ்வேலையைக் கவனித்து வந்தார்.

ரஸிகமணி ஸ்ரீமான் டி.கே.சிதம்பரநாதமுதலியாரவர்கள், ஸ்ரீ
ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவர்கள் போன்ற அன்பர்கள் சந்தித்த
காலங்களிலெல்லாம் சரித்திரம் எழுதவேண்டும் என்று தந்தையாருக்கு
நினைவூட்டி வந்தனர். சரித்திரம் முழுவதையும் எழுதி முடித்து ஒரு
புஸ்தகமாக வெளியிடலாம் என்று நினைத்தாலும் அவ்வாறு