பல தலங்களைப்பற்றிய செய்திகளும் அங்கங்குள்ள பெரிய மனிதர்களின்
பழக்கமும் ஐயரவர்களுக்குக் கிடைத்தன.
பிள்ளையவர்கள் மறைவுக்குப்பின்பு திருவாவடுதுறை ஆதீனத்தின்
தொடர்பு ஐயரவர்களுக்குப் பின்னும் இறுகலாக அமைந்தது. அதற்கு முன்
பிள்ளையவர்கள் மூலமாக ஆதீனத்தின் தொடர்பு இருந்துவந்தது. அதற்குப்
பின் ஆதினகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடமே பாடம் கேட்கப்
புகுந்தார்கள் ஐயரவர்கள். அதோடு மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும்
பணியையும் மேற்கொண்டார்கள். இதனால் இவர்களுடைய தமிழறிவு உரம்
பெற்று வந்தது.
அக்காலத்தில் கும்பகோணம் அரசாங்கக் காலேஜில் தியாகராச
செட்டியார் என்ற பெரும்புலவர் தமிழாசிரியராக இருந்தார். அவர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்தவர். அவர்
ஓய்வு பெறவேண்டிய காலம் வந்தபோது அவர் தம்முடைய இடத்தில்
ஐயரவர்களை நியமிக்கும்படி செய்தார். 1880-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
16-ஆம் தேதி முதல் ஐயரவர்கள் கல்லூரித் தமிழாசிரியராக வேலை பார்க்கத்
தொடங்கினார்கள்.
நிறைந்த தமிழ்ப் புலமை, எதையும் சுவையாக எடுத்து விளக்கும்
ஆற்றல், இசைப்பயிற்சி, அன்பு முதலிய இயல்புகளை இவர்கள் சிறப்பாகப்
பெற்றிருந்தமையால் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளத்தை எளிதில்
கவர்ந்தார்கள். ஆங்கில மோகம் உச்சநிலையில் இருந்த காலம் அது.
ஆங்கிலமும் பிறபாடங்களும் கற்பிக்கும் பேராசிரியர்களிடம்
மாணாக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல மதிப்பு இருந்து வந்தது.
இங்கிலீஷ்காரர்கள் சிலர் அந்தப் பாடங்களைக் கற்பித்து வந்தார்கள்.
அதனாலும் அவற்றிற்கும் அவற்றைக் கற்பிப்பவர்களுக்கும் மதிப்பு
உயர்ந்திருந்தது. தமிழாசிரியர்களுக்கு அத்தகைய மதிப்பு இல்லை.
அவர்களுக்குக் கிடைத்த ஊதியமும் மிகக் குறைவு. கல்லூரிச் சேவகனுக்கு
அடுத்தபடி சம்பளம் வாங்கினவர் தமிழாசிரியரே.
இத்தகைய நிலையில் ஐயரவர்கள் மாணாக்கர்களின் உள்ளத்தைப்
பிணித்ததோடு மற்ற ஆசிரியர்களுக்குச் சமமான மதிப்பையும் பெற்றார்கள்.
ஆங்கிலம் சிறிதும் அறியாவிட்டாலும், ஆண்டில் இளைஞராக இருந்தாலும்,
அவர்களுடைய புலமையும், பண்பும் மாணாக்கர்களும் ஆசிரியர்களும்
பிறரும் இவர்களைச் சிறந்தவர்களாக மதிப்பதற்குரிய காரணங்களாக இருந்தன. காலேஜில் ஆசிரியராகப் புகுந்த ஆண்டிலேயே (அக்டோபர் மாதம்)
ஐயரவர்களுக்கும் கும்பகோணத்தில் ஜில்லா முன்சீபாக இருந்த சேலம்
இராமசுவாமி முதலியாரவர்களுக்கும் பழக்கம்
|