இவ்வாராய்ச்சி மாணவரின் ஆய்வுத்திறனை மேலும் தூண்டிவிடும் என்று
நம்புகிறேன்.

இடைக்கால வரலாற்றில் கல்வெட்டுச் சான்றுகள் பெரிதும் பயன்பட்டு
வந்துள்ளன. இக்கல்வெட்டுகளுள் பெரும்பாலான கோயில்களுக்கும்
மடங்களுக்கும் மக்களும் மன்னர்களும் வழங்கிய கொடைகளையே
குறிப்பிடுவனவாகும். ஆகவே, அவற்றைக்கொண்டே தமிழ்ச் சமுதாயத்தின்
வரலாறு ஒன்றை வகுக்கக்கூடும் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது
பொருத்தமானதன்று. எப்படி இலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுக்
குறிப்புகள் அவ்வளவும் நம்ப முடியாதனவோ அப்படியே கல்வெட்டுச்
செய்திகள் அவ்வளவும் நம்பத்தக்கன அல்ல. கல்வெட்டுகள்
அவ்வப்போது பிற்காலத்தில் மாற்றி மாற்றியமைக்கப்பட்டதுமுண்டு. மேலும்
ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் இன்னும் வெளியிடப்படாமலேயே உள்ளன.
எனவே, இந்நிலையில் கல்வெட்டுச் செய்திகளை மட்டுங்கொண்டு திட்டமான
வரலாறு ஒன்றை வகுக்க முயல்வது சேற்றிலிட்டதூண் போலாகும்.
கல்வெட்டுச் செய்திகள் தனிப்பட்ட இலக்கியச் சான்றுகளாலும் வேறு
குறிப்புகளாலும் உறுதி செய்யப்படுவது நலமாகும்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் 15 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை உள்ள
காலம் மிகவும் குழப்பமானதொரு காலமாகும். தமிழகத்திலேயே கிடைக்கக்
கூடிய சான்றுகளைவிட இஸ்லாமியப் பயணிகளும் ஐரோப்பியப் பாதிரிகளும்
தரும் குறிப்புகள் மிகவும் பயனளிக்கக் கூடியனவாகவுள்ளன. எனினும் அவை
யாவும் எதையும் சீர்தூக்கிப் பார்த்து எழுதப் பட்டன என்றோ, வரலாற்றுக்
கூறுகள் அனைத்தையும் விளக்குவன என்றோ கூறுவதற்கில்லை.

இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் வரலாறு அனைத்திந்திய
வரலாற்றின் ஒரு பகுதியாகவே வளர்ந்து வந்துள்ளது. எனினும், தமிழக
வரலாற்றை இயன்ற அளவு பிரித்து எழுத முயன்றுள்ளேன். இந்த
நூற்றாண்டில், சிறப்பாக இந்தியா