தமிழகம் ஊரும் பேரும்

v

கிடைத்தது, தமிழ் நாட்டின் தவப் பயனாகும். தமிழ் கொழிக்கும்
பொருநைக்கரையில்பிறந்து, தமிழ் பொங்கும் பொதிகைத் தென்றலில்
வளர்ந்து, தமிழார்ந்த மனமொழிமெய்களைப் பெற்றுத் தமிழ் வண்ணமாய்த்
தமிழ் மொழியும் ஒரு பெருங்கொண்டலிடை உதித்த மின்னொளி இந் நூல்,
இதைத் தமிழ் நாட்டின் தவப்பயன் என்று சாற்றலாமன்றோ?

ஆசிரியர், நிலம்-மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்-குடி-
டை-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக்கொண்டு இந் நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர் பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள
குறிப்புக்களும், பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும்
என்பதில் ஐயமில்லை. தமிழ் நாட்டில் சில ஊர்ப்பேர்கள் சிதைந்தும்
திரிந்தும் மருவியும் மாறியும் தத்தம் முதனிலையை இழந்துள்ளன. அவை
மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந் நூல் பெருந்துணை
செய்தல் ஒருதலை. இந் நூலுள் பொலி தரும் சில ஊர்ப்பேர்களின் வரலாறு,
சாம்பியும் சோம்பியும் நலிந்தும் மெலிந்துங்கிடக்கும் நம் மக்கட்கு
அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம்புரியும்
பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் கவலையை நீக்கி, அதன்மாட்டு
வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாம்.

‘ஊரும் பேரும்’ என்னும் இந் நூல் காலத்துக்கேற்றது என்று சுருங்கச்
சொல்லலாம். இவ் விழுமிய நூலைச் செவ்விய முறையில் யாத்து உதவிய
ஆசிரியர்க்கு என் வாழ்த்தும் நன்றியும் உரியனவாக. அவர்க்குத் தமிழ்நாடு
கடமைப்படுவதாக. இத்தகைய நூல் பல, ஆசிரியர்பால் முகிழ்த்தல்
வேண்டுமென்று தமிழ்த் தெய்வத்தை வழுத்துகிறேன். தமிழ் வாழ்க; தமிழ்
வெல்க!

சென்னை, 
16-7-1946.

திரு. வி. க.