1921-ம் ஆண்டு சிந்து  வெளியில்  புதையுண்டு  கிடந்த  தமிழரின் மொகஞ்சொதரோ,   அரப்பா  என்னும்  இரு  பண்டைய   நகரங்கள்  கண்டுபிடிக்கப்பட்டு  அவ்விடங்களிற்   கிடைத்த   பழம்    பொருள்கள்  ஆராயப்பட்டன.  நுணுகி  ஆராய்ந்தபின்னர்   ஆராய்ச்சியாளர்,   அந்  நகரங்களில்  வாழ்ந்தோர்  தமிழர்கள்  என்றும்,  அவர்களின்  நாகரிகம் மெசபெதேமியா,   எகிப்து   முதலிய  நாடுகளின்  பழைய  நாகரிகங்களை ஒத்துள்ளதென்றும்,  அந்நகரங்கள்   ஆறாயிரம்   ஆண்டுகளுக்கு  முன்  அமைக்கப்பட்டனவென்றும் நவின்றனர்.

மத்தியதரை   நாடுகளில்   வாழ்ந்து   கொண்டிருந்த    மக்களே   கிழக்குநோக்கிச் சென்று இந்திய நாட்டிற் குடியேறினார்கள் என வரலாற்று நூலார் சிலர் புகன்றனர். இது  நேர்மாறாக நிகழ்ந்ததென்று  வேறு  சிலர் கருதினர்.  ஹெரஸ்பாதிரியார்  மொகஞ்சொதரோ,  அரப்பா   என்னும்  இடங்களிற் கிடைத்த 1800 முத்திரைகளை நுணுகி ஆராய்ந்தார். ஆராய்ந்த பின்னர்   இதுவரையில்   மத்திய   தரை   மக்களே  வந்து  இந்தியாவிற்  குடியேறினார்கள் எனக்  கருதப்பட்டுவந்த கொள்கை  தவறுடையதென்றும், தமிழர்களே இந்தியாவினின்றும் சென்று மத்தியதரை நாடுகள் முதல் எகிப்து, ஸ்பெயின், அயர்லாந்து வரையிற் குடியேறினார்களென்றும்  பல  சான்றுகள் காட்டி எழுதியுள்ளார்.*

இந்நூலகத்தே உள்ள "தமிழரின் சமயவரலாறு" என்னும் பகுதி, யாம் அச்சிடும்பொருட்டு எழுதி வைத்திருக்கும் விரிந்த நூல் ஒன்றின் சுருக்கம் ஆகும்.