நூன் முகம்
இக்காலம் குடியாட்சிக் காலம். மற்ற ஆட்சி முறைகளில் ஆட்சிமுறை பற்றிய அறிவு
ஆள்பவர்களுக்கு மட்டும் இருந்தால் போதும். குடியாட்சியிலோ ஆள்பவர் ஆளப்படுபவர்
என்ற வேறுபாடு கிடையாது. ஆகவே குடியாட்சி நன்கு நடைபெற வேண்டுமானால் எல்லாரும்
ஆட்சிமுறை பற்றிய அறிவு பெற்றாக வேண்டும்.
தமிழ் நாட்டின் தவக்குறையால் கற்றவர் தொகை மிகக் குறைவு. அதுவும் பொதுமகளுடன்
தொடர்பில்லாத ஒன்றிரண்டு வகுப்புகளுக்குள் குறுகி நிற்கிறது. இச் சிறு
பாலாருக்கும் தற்கால அறிவு நூல்கள் பிறமொழியிலன்றித் தமிழில் கிடைப்பதில்லை.
அண்மையில் அரசியல் பற்றிய சில பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை எழுதப்பட்ட
மொழி மட்டும்தான் தமிழ். (உண்மையில் அதுவும் தமிழ் கலந்த ஒரு மொழி என்றுதான்
கூறவேண்டும்!) அதன்கண் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு, தமிழரால் எழுதப்பட்டதென்று
காட்டும் அற்ிகுறிகள் தேடிப்பார்த்தாலும் அகப்படாது. நூல் எழுதுபவர் ‘நோக்கு’
முழுவதும் போலி மேனாட்டு மேடையிலிருந்து, அல்லது வேறு நாட்டு மேடையிலிருந்து,
நோக்குபவர் நோக்காய் அமைகின்றது.
|