அமைத்து இதைப் பாடியிருக்கிறார். குழந்தைகள் தாளம் போட்டு உற்சாகமாகப் பாடும்
வகையில் பாடல்கள் அமைந்திருக்கின்றன. நீதிகளையும் தத்துவங்களையும் விரித்துக் கூறிச்
சோர்வடையச் செய்யாமல் உணர்ச்சியூட்டும் வகையில் நிகழ்ச்சிகளைச் சொல்லிக்
கதையைப் பின்னியிருக்கிறார். குழந்தையோடு குழந்தையாகப் பழகிப் பெற்ற அநுபவமும்,
பாடிப் பாடிக் கைவந்த பழக்கமும் அழ. வள்ளியப்பாவின் பாடல்களுக்கு மதிப்பை
உண்டாக்கியிருக்கின்றன. காந்தியின் மறைவைச் சொல்லும் பகுதி மிகவும் உருக்கமாக
அமைந்திருக்கிறது.

குழந்தைகளின் உள்ளமென்னும் பீடத்தில் காந்தியின் புனித உருவத்தை நிறுத்துவதற்கு
இதைவிடச் சிறந்த கருவி வேறு ஏதும் இல்லை. இதைப் பாடலாம்; தாளம் போட்டு
ஆடலாம்; காந்தியின் தகைமையை எண்ணிப் பெருமை கொள்ளலாம்; நாமும் இப்படி
வாழவேண்டும் என்ற ஆர்வம் கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.

தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கியளிப்பதைக்
கடமையாகக் கொண்டால் குழந்தைகளின் உள்ளத்தில் ஒளியுண்டாக்கியவர் ஆவார்கள்.

இறைவன் திருவருளால் குழந்தைக் கவிஞர் நீடூழி வாழ்ந்து, இன்னும் பல
கவிதைகளைக் குழந்தை உலகத்துக்கு வழங்கவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

காந்தமலை
சென்னை-28.

கி.வா. ஜகந்நாதன்
18-10-1968