பயிற்றல் இறந்ததன் பயனே'' (கற்பு. 51)
என நான்கு வருணத்தார் இயல்பும்,
''நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்'' (புறத். 16)
எனவும்,
''காமம் நீத்த பாலி னானும்'' (புறத்.17)
எனவும், புறமாகிய வீடுபேற்றிற்குரிய வானப்பிரத்த சந்நியாசிகள்
இயல்பும் கூறுதலின், அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத்
தும்பை ஈறாகக் கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட
ஒருசாரனவும் காஞ்சிப்படலத்து நிலையாமையும், பாடாண் பகுதியிற்
கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவை எல்லாம் பொருளின்
பகுதியாதலின், அப்பொருள் கூறினாராம். அகத்திணையியலானும்
களவியலானும் கற்பியலானும் இன்பப் பகுதி கூறினாராம் அஃதேல்,
பிற நூலாசிரியர் விரித்துக் கூறினாற்போல, அறமும் பொருளும்
விரித்துக் கூறாதது என்னையோவெனின், உலகத்தில் நூல் செய்வார்
செய்கின்றது, அறிவிலாதாரை அறிவுகொளுத்தவேண்டியன்றே;யாதானும்
ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விரித்து ஓதுவாராயின்,
ஓதுகின்ற தனாற் பயன் இன்றாமாதலால், முன்னூலாசிரியர் விரித்துக்
கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும், தொகுத்துக் கூறின பொருளை
விரித்துக்கூறலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்று உணர்க.
அஃதேல் இந் நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின், காமப்
பகுதியும் வீரப் பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும்
ஆகலானும், பொருளானே அறஞ்செய்யும் ஆகலானும், இன்பமும்
பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க.
அஃதற்றாக, இது பொருளதிகாரமாயின், உலகத்துப் பொருள்
எல்லாம் உணர்த்தல் வேண்டுமெனின், அது முதல், கரு, உரிப்பொருள்
எனத் தொகைநிலையான் அடங்கும். அவ்வாறு வகுக்கப்பட்ட
பொருளை உறுப்பினாலும், தொழிலினாலும், பண்பினாலும் பாகுபடுத்தி
நோக்க வரம்பிலவாய் விரியும். இக் கருத்தினானே இவ்வாசிரியர்
உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் முதல் கரு உரிப்பொருள்
என ஓதினார் என உணர்க.
அஃதற்றாக, இவ் வதிகாரத்துள் உரைக்கின்ற பொருளை யாங்ஙனம்
உணர்த்தினாரோ எனின், முற்பட இன்பப் பகுதியாகிய கைக்கிளை
முதலாகப் பெருந்திணை ஈறாக அகப்பொருள் இலக்கணம் உணர்த்தி,
அதன்பின் புறப்பொருட் பகுதியாகிய வெட்சி முதலாகப் பாடாண்டிணை
ஈறாகப் புறப்பொருள் இலக்கணம் உணர்த்தி, அதன் பின் அகப்பொருட்
பகுதியாகிய களவியல் கற்பியல் என இரண்டு வகைக் கைகோளும்
உணர்த்தி, அதன்பின் அகம் புறம் என இரண்டினையும் பற்றிவரும்
பொருள் இயல்பு உணர்த்தி, அதன்பின் அவ்விரு பொருட் கண்ணும்
குறிப்புப்பற்றி நிகழும் மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் வடிவும்
தொழிலும் பண்பும், பயனும் பற்றி உவமிக்கப்படும் உவம இயல்
உணர்த்தி, அதன்பின் எல்லாப் பொருட்கும் இடமாகிய செய்யுள் இயல்
உணர்த்தி அதன்பின், வழக்கு இலக்கணமாகிய
மரபு இயல்
உணர்த்தினார் என்று கொள்க. இவ் வகையினானே அகத்திணை இயல்,
புறத்திணை இயல், களவியல், கற்பியல், பொருள் இயல்,
மெய்ப்பாட்டு இயல், உவம இயல், செய்யுள் இயல், மரபு இயல் என
ஓத்து ஒன்பதாயின.
முதலாவது
அகத்திணை இயல்
இவ்வதிகாரத்துள், இம் முதற்கண் ஓத்து அகப்பொருள் இலக்கணம்
நுதலிற்று.
1. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.
இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், அகப்பொருள்
இத்துணை என வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.
(இதன் பொருள்)கைக்கிளை முதல் ஆக பெருந்திணை இறுவாய்
(ஆக) -கைக்கிளை என்று சொல்லப்படும் பொருள் முதலாகப்
பெருந்திணை என்று சொல்லப்படும் பொருள் ஈறாக, எழுதிணை
முற்படக் கிளந்த என்ப - ஏழு பொருள் முற்படக் கூறப்பட்டன என்று
சொல்வர்.
முதலா என்பது முதலாக என்னும் பொருள்பட நின்றது; விகாரம்
எனினும் அமையும். இறுவாயாக என்பதன்கண் ஆக என்பது எஞ்சி
நின்றது. எழுதிணையும் முற்படக் கிளந்த எனற்பாலது மொழிமாறி
நின்றது. கிளந்த என்பது கிளக்கப்பட்டன என்னும் பொருள்பட
வந்த முற்றுச்சொல். முற்படக் கிளந்த எழுதிணை கைக்கிளை
முதலாகப் பெருந்திணை இறுதிய எனினும் இழுக்காது. "முற்படக்
கிளந்த" என்றமையான், அவை ஏழும் அகப்பொருள் என்று
கூறினாருமாம்; அகம், புறம் எனப் பொருளை வரையறுத்தல் இவர்
கருத்தாகலின். அன்னதாதல்,
"அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்" (புறத்-1)
என்பதனாற் கொள்க.
முற்படக் கிளந்த எழுதிணை எனவே பிற்படக் கிளக்கப்படுவன
எழுதிணை உள என்பது பெறுதும். அவையாவன, வெட்சி முதலாகப்
பாடாண்டிணை ஈறாகக் கிடந்த எழுதிணை
|