இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3
Zoom In NormalZoom Out


 

யும், இவ்வகையினான் இவ்வதிகாரத்திற் கூறப்பட்ட பொருள் பதினான்கு
என்பதூஉம். அவையும்,

"வெட்சி தானே குறிஞ்சியது புறனே"             (புறத்.1)

எனவும்,

"வஞ்சி தானே முல்லையது புறனே"             (புறத். 4)

எனவும், இவ்வாறு கூறுதலின் ஏழாகி அடங்கும் என்பதூஉம் கொள்க.

அஃதேல்,    மெய்ப்பாட்டியலானும்,  உவம இயலானும்,  செய்யுள்
இயலானும், மரபு இயலானும்  கூறப்பட்ட பொருள் யாதனுள் அடங்கும்
எனின்,  அவை  கருப்பொருளும்  அப்பொருளாற் செய்யப்பட்டனவும்
அப்   பொருளின்  குணம்   முதலியனவும்  அப் பொருளின் குறிப்பு
நிகழ்ச்சியும் ஆதலின்,   அவையும்   கருப்பொருளின்  பால் நடுவண்
ஐந்திணையுள்   அடங்கும்  என்ப.  அவை  சிறுபான்மை  கைக்கிளை
பெருந்திணையினும் வரும். அவ்வெழுதிணையும் ஆவன  - கைக்கிளை,
முல்லை,  குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை.

கைக்கிளை  என்ற  பொருண்மை  யாதோ  எனின், கை  என்பது
சிறுமைபற்றி வரும்.  அது   தத்தம்  குறிப்பிற்  பொருள் செய்வதோர்
இடைச்சொல்;  கிளை  என்பது உறவு;  பெருமையில்லாத தலைமக்கள்
உறவு  என்றவாறு  ;  கைக்குடை,  கையேடு,   கைவாள்,  கைஒலியல்,
கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாதலின்.

நடுவண்   ஐந்திணைக்கண்   நிலமும்   காலமும்  கருப்பெருளும்
அடுத்துப்  புணர்தல்  பிரிதல்  இருத்தல்   இரங்கல்  ஊடல்   எனச்
சொல்லப்பட்ட அவ் உரிப்பொருள், ஒத்த அன்பும் ஒத்த குலனும் ஒத்த
வடிவும் ஒத்த குணனும்  ஒத்த  செல்வமும் ஒத்த இளமையும் உளவழி
நிகழுமாதலின்,  அது பெருங்  கிளைமை ஆயிற்று. முல்லை முதலாகிய
ஐந்தும் முன்னர்க் கூறப்படும்.

பெருந்திணை,   நடுவண் ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மிக்கும்
குறைந்தும் வருதலானும், எண்வகை மணத்தினும் பிரமம் பிரசாபத்தியம்
ஆரிடம் தெய்வம் என்பன அத் திணைப்பாற் படுதலானும், இந் நான்கு
மணமும்   மேன்மக்கள்மாட்டு   நிகழ்தலானும்,   இவை   உலகினுள்
பெருவழக்கு எனப்  பயின்று வருதலானும்,  அது  பெருந்திணை எனக்
கூறப்பட்டது.   அஃதேல்,  நடுவண்  ஐந்திணையாகிய ஒத்த  கூட்டம்
பெருவழக்கிற்றன்றோ எனின்,  அஃது  அன்பும்  குலனும்  முதலாயின
ஒத்துவருவது உலகினுள் அரிதாகலின் அருகியல்லது வாராது என்க.

இந் நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும்
குணனும்    செல்வமும்   ஒழுக்கமும்  இளமையும்  அன்பும் ஒருங்கு
உளவழி இன்பம் உளதாம்  எனவும்,  கைக்கிளை,  ஒருதலை வேட்கை
எனவும், பெருந்திணை ஒவ்வாக்  கூட்டமாய் இன்பம்  பயத்தல் அரிது
எனவும் கூறுதலான், இந் நூலுடையார்  காமத்துப் பயனின்மை உய்த்து
உணர வைத்தவாறு அறிந்துகொள்க.                          (1)

2. அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.

இது,    மேற்    சொல்லப்பட்ட எழுதிணையுள்,  நிலம் பெறுவன
வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

அவற்றுள்- மேற்சொல்லப்பட்ட எழுதிணையுள், நடுவணது ஒழிய -
நடு எனப்பட்ட பாலை  ஒழிய, நடுவண்  ஐந்திணை   -   (கைக்கிளை
பெருந்திணைக்கு)  நடுவணதாகி  நின்ற  ஐந்திணை,  படுதிரை வையம்
பாத்திய  பண்பு - ஒலிக்கின்ற திரைகடல் சூழ்ந்த உலகம் பகுக்கப்பட்ட
இயல்பு.

இதனாற்  சொல்லியது.   எழுவகைத்திணையினும்  நிலம் பெறுவன
நான்கு என்றவாறாயிற்று. நடுவணது  பாலை  என்று  எற்றாற் பெறுதும்
எனின், வருகின்ற சூத்திரங்களுள்,

"முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்"             (அகத்.5)

என     நிலம்  பகுத்து  ஓதினமையின், நடுவணது  பாலை எனக்
கொள்ளப்படும். நடுவுநிலைத் திணையெனினும் பாலை எனினும் ஒக்கும்.
பாலை என்னுங் குறியீடு எற்றாற்பெறுதும் எனின்,

"வாகை தானே பாலையது புறனே"              (புறத். 15)

என்பதனாற்  பெறுதும்.   இச்    சூத்திரத்துள்   ஒழிய   என்னும்
வினையெச்சம் எவ்வாறு  முடிந்தது  எனின்,  அது  பாத்திய  என்னும்
பெயரெச்சத்தோடு    முடிந்தது.  அப்  பெயரெச்சம்  பண்பு  என்னும்
பெயர்கொண்டு  ஐந்திணை   என்னும்   எழுவாய்க்குப் பயனிலையாகி
நின்றது என உரைப்ப.

இவ்வாறு   உரைப்பவே, ஐந்திணை பண்பு என வரூஉங் காலத்துப்
பயன்பட    நில்லாமையின் அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:
ஒழிய என்பதனை எச்சப்படுத்தாது முற்றுப்படக் கூறி,

"படுதிரை வையம் பாத்திய பண்பு நடுவண தொழிய"

எனப் பொருள் உரைப்ப,  அஃதேல்  வினையெச்ச  வாய்பாட்டால்
வரும் முற்றுளவோ எனி