நீரும் இல்லாத வழிஏகினார் எனவும் கவலுமாகலின், அதற்கு அது
சிறந்தது என்க. [தான் என்பது அசை. ] (12)
13. இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
உரிய தாகும் என்மனார் புலவர்.
இது பாலைக்கு உரிய பொருளாம் ஆறு உணர்த்துதல் நுதலிற்று.
இருவகை பிரிவும் - இருவகைப் பிரிவான தலை மகளைப்
பிரிதலும் தலைமகளை உடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும்.
நிலைபெறத் தோன்றலும் - நிலைபெறத்தோன்றலும். உரியது ஆகும்
என்மனார் புலவர் - பாலைக்கு உரிய பொருளாம் என்று கூறுவார்
புலவர் (தமர்வரை - தமரை மட்டும்).
உம்மை எச்ச உம்மையாகலான், நிலைபெறத் தோன்றாது
பிரிதற்குறிப்பு நிகழ்ந்துழியும் பாலைக்கு உரிய பொருளாம் என்று
கொள்க. அதிகாரப்பட்டுவருகின்றது பாலையாகலின், இருவகைப் பிரிவும்
பாலைக்குரிய பொருளாயின.
14. திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன்நன் குணர்ந்த புலமை யோரே.
இது மேல் அதிகரிக்கப்பட்ட நிலத்தினானும் காலத்தினானும்
ஆகிய திணை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
திணைமயக்குறுதலும் கடிநிலை இல - ஒரு திணைக்கு உரிய
முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேரநிற்றலும்
கடியப்படாது நிலன் ஒருங்கு மயங்குதல் இல் என மொழிப - ஆண்டு
நிலன் சேரநிற்றல் இல்லை என்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த
புலமையோர் - புலன் நன்கு உணர்ந்த புலமையோர்.
எனவே, காலம் மயங்கும் என்றவாறாயிற்று. அதற்குச் செய்யுள்;
"தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தான்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போல்
எல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர
எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருள்மாலை;
பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்திறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல்செய் தகன்றாரை உடையையோ நீ;
மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்
நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய
என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல
இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ;
பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்
இனிவரின் உயருமன் பழியெனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண் டினைதியோ எம்போல
இனியசெய் தகன்றாரை உடையையோ நீ;
எனவாங்கு,
அழிந்தயல் அறிந்த எவ்வம் மேற்படப்
பெரும்பே துறுதல் களைமதி பெரும
வருந்திய செல்லல்தீர் திறனறி ஒருவன்
மருந்தறை கோடலிற் கொடிதே யாழநின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்துக விடினே"(கலி - நெய்.12)
எனவரும்,
[முதல் ஏகாரம் அசைநிலை. இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.] (14)
15. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே.
இஃது எய்தாதது, எய்துவித்தல் நுதலிற்று.
உரிப்பொருள் அல்லன - உரிப்பொருள் அல்லாத கருப்பொருளும்,
முதற்பொருளும்; மயங்கவும் பெறும் மற்றொரு திணையொடு சேர
நிற்கவும் பெறும்.
உம்மை எதிர்மறை யாகலான் மயங்காமை பெரும்பான்மை. எனவே,
"உய்த்துக் கொண்டுணர்தல்" (மரபு. 110)
என்னும் தந்திர உத்தியான் எடுத்தோதிய காலமாகிய முதற்பொருளும்,
பூவும் புள்ளுமாகிய, கருப்பொருளும் மயங்கியும் மயங்காமையும் வரும்.
எனவே, உரிப்பொருள் மயங்கிவராது என்றவாறு. மயங்கி வருதல் கலி
முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க.
"ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ்
ஊசி போகிய சூழ்சேய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண்டாகம் செஞ்சாந்து நீவி" (அகநா.48)
என்றவழி, மருதத்திற்குக் கருப்பொருளாகிய கழுநீரும் குறிஞ்சிக்குரிய
வெட்சிப் பூவும் அணிந்தோன் என்றமையாற் கருப்பொருள்
மயக்கமாயிற்று. பிறவும் அன்ன. (15)
16. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.
இஃது, உரிப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம்
என்று இவை -புணர்தலும், பிரிதலும், இருத்தலும், இரங்கலும், ஊடலும்
அவற்றின் நிமித்தமும் என்று சொல்லப்பட்ட இவை, தேரும் காலை
திணைக்கு உரிப்பொருள் - ஆராயுங்காலத்து ஐந்திணைக்கும் உரிப்
பொருளாம்.
பிரிவு பாலைக்கு உரித்தாமாறு மேற்சொல்லப்பட்டது. 'ஏனைய
மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் '(மரபு.110). என்னும் தந்திர
உத்தியால், புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது
முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தற்கும், ஊடல் என்பது
மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரித்தாகவும் சிறுபான்மை
எல்லாப்பொருளும், எல்லாத்திணைக்கும் உரித்தாகவும் கொள்ளப்படும்.
இருத்தலாவது, தலைமகன் வருந்துணையும் ஆற்றியிருத்தல்;
இரங்கலாவது ஆற்றாமை என்று என்பது எண்ணிடைச்சொல்.
ஏகாரம் ஈற்றசை.
17. கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவண் இரங்கலும்
உண்டென மொழிப ஓரிடத் தான.
இதுவும், ஒருசார் உறுப்புப் பொருள் ஆமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
கொண்டு தலைக்கழிதலும் (உண்டு) பிரிந்து அவண் இரங்கலும்
உண்டு - கொண்டுதலைக் கழிதலும் உண்டு, பிரிந்து
|