இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   9
Zoom In NormalZoom Out


 

நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"
                           (சிலப். காடுகாண். 64-66)

எனப்  பிற சான்றோர் செய்யுள் அகத்து வருதலானும், இந் நிலங்களில்
வேனிற்   காலத்து   நிகழ்வன,  கருப்பொருளாகக்   கொள்ளப்படும்.
தெய்வம் - கொற்றவை.  உணவு  - ஆறலைத்தலான் வரும் பொருள்.
மா  - வலியழிந்த   யானையும்,   வலியழிந்த   புலியும்,  வலியழிந்த
செந்நாயும். மரம் - பாலை, இருப்பை,கள்ளி,   சூரை. புள் -எருவையும்.
பருந்தும். பறை  - ஆறலைப்பறையும், சூறைகொண்ட பறையும். செய்தி
- ஆறலைத்தல். பண் -  பாலை. பிறவும்  என்றதனால். பூ - மராம்பூ.
நீர்-அறுநீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும், பிறவும் இந்நிகரன கொள்க.

மருதத்திற்குத் தெய்வம் இந்திரன்; 'தீம்புனல்  உலகம்' (அகத்.5)
எனவும், 'வைகறை விடியல்,  (அகத் - 9)  எனவும் ஓதினமையால்,
அவ்விடத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க.

உணவு-நெல். மா-எருமையும், நீர்நாயும், மரம் -மருதும். காஞ்சியும்,
புள்  -  அன்னமும்  அன்றிலும்.  பறை  - நெல்லரி பறை, செய்தி -
உழவு.  பண்   -   மருதம். பிறவும்   என்றதனால்,  பூ  தாமரையும்
கழுநீரும். நீர் - ஆற்றுநீரும் பொய்கை நீரும். பிறவும் அன்ன.

நெய்தற்குத் தெய்வம் வருணன். "மணல் உலகம்" (அகத்  -  5)
என்றதனானும்,'எற்பாடு'(அகத்.10) என்றதனானும், ஆண்டு நிகழ்பவை
கொள்க.  உணவு   -  உப்பு விலையும் மீன் விலையும், மா - கராவும்
சுறவும். மரம்  -  புன்னையும்  கைதையும். புள் - கடற்காக்கை. பறை
- நாவாய்ப்  பறை.   செய்தி  -  மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும்.
பண்  -  செவ்வழி.  பிறவும்  என்றதனால்,  பூ  -  நெய்தல்,  நீர் -
கேணி நீரும் கடல் நீரும். பிறவும் அன்ன.

21. எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்.

இது, மேலதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

எ  நிலமருங்கின் பூவும் புள்ளும் - யாதானும் ஒரு நிலத்திற் குரிய
பூவும் புள்ளும்,அ நிலம் பொழுதொடு வாராவாயினும் அந் நிலத்தொடும்
பொழுதொடும் வந்தில வாயினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும்-வந்த
நிலத்தின் பயத்த ஆகும்.

"வந்தது கொண்டு வாராதது முடித்தல்"(மரபு .412) என்பதனால்
சிறுபான்மை   ஏனையவும்   வந்தவழிக்    கண்டுகொள்க;  இவ்வாறு
வருவன திணை மயக்கம் அன்றென்றவாறு.                    (21)

22. பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய
திணை தொறும் மரீஇய திணைநிலைப் பெயரே.

இதுவும், கருப்பொருளின் பாகுபாடாகிய  மக்கட்டிறம் உணர்த்துதல்
நுதலிற்று.

பெயரும்   வினையும்  என்று  அ  இருவகைய -  குலப்பெயரும்
தொழிற்பெயரும் என   அவ்விருவகைப்படும்,  திணைதொறும் மரீஇய
திணைநிலைப்பெயர் - திணைதொறும் மருவிப் போந்த திணைநிலைப்
பெயர்.

திணைநிலைப்பெயர்   என்றதனான் அப்பெயருடையார் பிறநிலத்து
இலர்   என்று   கொள்ளப்படும்.  அதனானே  எல்லா  நிலத்திற்கும்
உரியராகிய மேன்மக்களை ஒழித்து நிலம்பற்றி வாழும் கீழ்மக்களையே
குறித்து ஓதினார் என்று கொள்க.பெயர் என்றதனால் பெற்ற தென்னை?
மக்கள்   என  அமையாதோ?  எனின், மக்களாவார் புள்ளும் மாவும்
போல வேறு பகுக்கப் படார்.  ஒரு    நீர்மைய    ராதலின் அவரை
வேறுபடுக்குங்கால்  திணைநிலைப்பெயரான்  அல்லது   வேறுபடுத்தல்
அருமையின்,  பெயர்  என்றார்.  [சுட்டு  நீண்டு  நின்றது. ஏகாரம் -
ஈற்றசை. திணைநிலப் பெயர் எனவும் பாடம்.].                 (22)

23. ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே.

இது, நிறுத்தமுறையானே முல்லைக்குரிய மக்கட்பெயர் உணர்த்துதல்
நுதலிற்று.

ஆடூஉ திணைப்பெயர் ஆயர் வேட்டுவர் - ஆண் மக்களைப்பற்றி
வரும்   திணைப்பெயர்   ஆயர் எனவும்  வேட்டுவர் எனவும் வரும்.
ஆவயின் வரும். கிழவரும் உளர்-அவ்விடத்து வரும் கிழவரும் உளர்.

ஆயர்  என்பார் நிரைமேய்ப்பார். வேட்டுவர் என்பவர் வேட்டைத்
தொழில் செய்வார். அஃது எயினர் என்னும் குலப்பெயருடையார் மேல்
தொழிற்பெயராகி வந்தது. "வந்தது கொண்டு வாராதது முடித்தல் "(மரபு.
112) என்பதனான்  ஆய்ச்சியர் எனவும் கொள்க. அவ்விரு திறத்தாரும்
காடு   பற்றி  வாழ்தலின் அந்நிலத்தின்  மக்களாயினார்.  அவ்வயின்
வரூஉம்  கிழவர்   இருவகையர்,  அந்நிலத்தை  ஆட்சி பெற்றோரும்,
அந்நிலத்து உள்ளோரும் என. 'குறும்பொறைநாடன் 'என்பதுபோல்வன
ஆட்சிபற்றி  வரும்.  'பொதுவன் ஆயன், என்பன குலம் பற்றி வரும்.
[சுட்டு நீண்டு இசைத்தது. ஏகாரம் ஈற்றசை.]                   (22)

24. ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை
ஆனா வகைய திணைநிலைப் பெயரே.

இது,  குறிஞ்சி முதலாய திணைக்கண்  வரும் திணை நிலைப்பெயர்
உணர்த்துதல் நுதலிற்று.

ஏனோர்   மருங்கினும்  எண்ணும்  காலை  - ஏனை  நிலத்துள்ள
மக்கண்மாட்டும்  ஆராயுங்காலத்து,  ஆன் ஆ வரைய திணை நிலைப்
பெயர் - அவ்விடத்து அவ்வகைய திணைநிலைப் பெயர்.

என்றது,   திணைதொறும்  குலப்பெயரும் தொழிற்பெயரும் கிழவர்
பெயரும் வரும் என்றவாறு.  ஆன்  என்பது அவ்விடம்;  அ என்னும்
சுட்டு நீண்டிசைத்தது. அவை வருமாறு -