யலுள் கூறப்படும் என்க. ஈண்டும் சிறுபான்மை கூறுப. (30)
31. மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே.
இது, நிறுத்த முறையானே அறம்காரணமாகப் பிரிதற்குரிய
தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.
மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்து -மேலோராகிய தேவரது
முறைமையை நிறுத்தற்குப் பிரியும் பிரிவு நான்கு வருணத்தார்க்கும்
உரித்து. [ஏகாரம் ஈற்றசை]
32. மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப.
இது, காவற்பகுதியாகிய முறை செய்வித்தற்கு உரிய மக்களை
உணர்த்துதல் நுதலிற்று.
மன்னர் பாங்கின் -மன்னர்க்குரிய பக்கத்திற்கு, பின்னோர் ஆகுப-
(அவ்வாறு முறை செய்தற்கு அரசன் தான் சேறல் வேண்டாமையின்,
அதற்குரியராய் அவனது ஏவல் ழி வரும்) வணிகரும் வேளாளரும்
உரியர் ஆகுப.
மன்னர்க்குரிய பக்கமாவது காவல்; அஃதாவது நெறியின்
ஒழுகாதாரை நெறியின் ஒழுகப் பண்ணுதல். (32)
33. உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான
இது, வணிகர்க்கு உரியதோர் பிரிவு உணர்த்துதல்
நுதலிற்று.
உயர்ந்தோர்க்கு - மேல் அதிகரிக்கப்பட்ட பின்னோராகிய
இருவகையோரிலும் உயர்ந்தோராகிய வணிகர்க்கு, ஓத்தினான உரிய -
ஓதுதல் நிமித்தமாகப் பிரிதலும் உரித்து.
ஓத்துப் பலவாதலின் 'உரிய' என்றார்.ஈண்டு ஓத்து என்பது வேதம்;
அது நால்வகை வருணத்தினும் மூவர்க்கு உரிய தென்பது
இத்துணையெனக் கூறப்பட்டது.
34. வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்திடன் உடைத்தே.
இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர் பிரிவு உணர்த்துதல்
நுதலிற்று.
வேந்து வினை இயற்கை -வேந்தனது வினை இயற்கையாகிய தூது,
வேந்தன் ஒரீஇய ஏனோர் மருங்கினும் - வேந்தனை ஒழிந்த
வணிகர்க்கும் வேளாளர்க்கும், எய்து இடன் உடைத்து - ஆகுமிடன்
உடைத்து.
வேந்தனது வினை - வேந்தற்குரிய வினை. ' இடனுடைத்து'
என்றதனான் அவர் தூதாங்காலம் அமைச்சராகிய வழியே நிகழும்
என்று கொள்க. [ஏகாரம் ஈற்றசை.] (34)
35. பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே.
இதுவும் அது.
பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்து - பொருள்வயிற்
பிரிவும் மேற்சொல்லப்பட்ட வணிகர் வேளாளரிடத்தில் உரியதாகும்.
[ஏகாரம் ஈற்றசை.] (35)
36. உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக் கத்தான.
இஃது, அந்தணர் பொருட்குப் பிரியுந்திறன் உணர்த்துதல் நுதலிற்று.
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான - உயர்ந்தோராகிய
அந்தணர் பொருள்வயிற் பிரியுங்காலத்து ஒழுக்கத்தானே பிரிப.
இதனாற் சொல்லியது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் வாணிகம்
முதலாயின பொருணிமித்தம் ஆகியவாறுபோல, அந்தணர்க்கு இவை
பொருணிமித்தம் ஆகா என்பதூஉம், அவர்க்கு இயற்கை
யொழுக்கமாகிய ஆசாரமும், செயற்கையொழுக்கமாகிய கல்வியுமே
பொருட்குக் காரணமாம் என்பதூஉம் கண்டவாறு. [ஈற்றகரம் சாரியை.]
(36)
37. முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை.
இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல்
நுதலிற்று.
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை -(ஈண்டு அதிகரிக்கப்பட்ட
பிரிவு காலிற்பிரிவும் கலத்திற்பிரிவும் என இருவகைப்படும்; அவற்றுள்)
கலத்திற்பிரிவு தலைமகளுடன் இல்லை.
எனவே, காலிற்பிரிவு தலைமகளை உடன்கொண்டு பிரியவும் பெறும்
என்றவாறாம்.
கலத்திற் பிரிவு. தலைமகளை ஒழியப் பிரிந்தமைக்குச் செய்யுள்
"உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்ளெரி மருங்கறிந்து ஒய்ய
ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மையே அழிபடர் அகல
வருவர் மன்னால் தோழி தண்பணைப்
பொருபுனல் வைப்பின் நம்மூர் ஆங்கண்
கருவிளை முரணிய தண்புதல் பகன்றைப்
பெருவளம் மலர அல்லி தீண்டிப்
பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க
அறன்இன் றலைக்கும் ஆனா வாடை
கடிமனை மாடத்துக் கங்குல் வீசித்
திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிரைவளை ஊருந் தோளென
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே " (அகம்.255)
என வரும்.
காலிற் பிரிவுக்கு உதாரணம் வந்துழிக் காண்க. (37)
38. எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான.
இத்துணையும் பாலைக்குரித்தாகிய பிரிவி
|