கண்டுகொள்க.
இருபாற்கும் உரித்து என்னும் உம்மை முற்றும்மை.
189. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும்.
உரை : ஒருவர் என்னும் பெயரது இயல்பு கருதின் அஃது ஒருமைப் பெயராயினும் பல்லோரறியுஞ் சொல்லொடு தொடர்தற்கு ஏற்கும் என்றவாறு.
வரலாறு : ஒருவர் வந்தார், ஒருவர் அவர் எனவரும்.
190. இன்ன பெயரே யிவையெனல் வேண்டின்
முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல்.
உரை : நீயிர் நீ ஒருவர் என்பனவற்றை இன்னபாற் பெயரென்று அறியலுறின் சொல்லுவான் குறிப்பொடுங் கூட்டி முறையால் உணர்க என்றவாறு.
வரலாறு : ஒரு சாத்தன், ஒருவனானும் ஒருத்தியானும் பலரானும் ஒன்றானும் பலவானும் தன்னுழைச் சென்றவழி, ‘நீ வந்தாய், நீயிர் வந்தீர்’ என்னுமன்றே ; ஆண்டு அது கேட்டான், இவன் இன்னபால் கருதிக் கூறினான் என்பது உணரும். இனி,
‘ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுக லாற்றின்’ (நாலடி - 309)
என்பது சொல்லுவான் ஆடூஉ ஒருமை குறித்தான் என்பது விளங்கும்.
ஏகாரம் தேற்றேகாரம். ‘முறையி னுணர்தல்’ என்பது பாதுகாவல்.
(39)
191.
மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி
மகடூஉ வியற்கை தொழில்வயி னான.
என் நுதலியவாறே வெனின், இனி ஒருசார் உயர்திணைப் பெயர்க்கும் விரவுப்பெயர்க்கும் எஞ்சி நின்ற இலக்கணங் கூறுகின்றார்.
உரை : மகடூஉப் பொருண்மைக்கண் பால்திரிந்து வரும் பெண்மகன் என்னும் பெயர் வினைகொள்ளுமிடத்து மகடூஉவிற்குரிய வினைகொள்ளும் என்றவாறு.
வரலாறு : பெண்மகன் வந்தாள் எனவரும்.
பொருண்மைபற்றி மகடூஉவினை கொள்ளுமோ, ஈறுபற்றி ஆடூஉவினை கொள்ளுமோ என்று ஐயுற்றார்க்கு ஐயம் அகற்றியது. (40)
|