இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1237
Zoom In NormalZoom Out


192. ஆவோ வாகும் பெயருமா ருளவே
யாயிட னறிதல் செய்யு ளுள்ளே. 

உரை : ஆகாரம்  ஓகாரமாய்த்  திரியும்  பெயருமுள,  அத்திரியும்
இடமறிக செய்யுளுள்ளே என்றவாறு. 

வரலாறு : 

‘வில்லோன் காலன கழலே தொடியோண்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்யார்
கொல் லளியர் தாமே’

                                (குறுந்தொகை - 7)
 

என வரும். (41) 

193. இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கு
மியற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா
நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான. 

உரை     :   செய்யுளுள்   கருப்பொருண்மேற்   கிளக்கப்படும்
இருதிணைக்குமுரிய,   உயர்திணை  யுணர்த்தா,  அவ்வந்  நிலத்துவழி
அஃறிணைப் பொருளாய் வழங்கப்பட்டு வருதலான் என்றவாறு. 

வரலாறு : 

‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு
வதுவை வந்த வன்பறழ்க் குமரி’ 

என்புழிக்,     கடுவன்   முதுமகன்   குமரி   என,  அஃறிணைப்
பொருளவாயல்லது  நிலத்துவழிமருங்கிற் றோன்றாமையின் உயர்திணை
சுட்டாதவாறு  கண்டுகொள்க.  நிலமாவன,  முல்லை  குறிஞ்சி  மருதம்
நெய்தல் என்பன. (42) 

194. திணையொடு பழகிய பெயரலங் கடையே. 

உரை     : கருப்பொருள் உணர்த்தும் விரவுப்பெயர் உயர்திணை
சுட்டாது,  அஃறிணை சுட்டு அவ்வத்திணைக்குரியவாய் விளங்கப்பட்டு
வரும் பெயரல்லாத விடத்து என்றவாறு. 

எனவே,  திணைக்குரியவாய்    வழங்கப்பட்டு    வரும்    பெயர்
இருதிணையுஞ் சுட்டி வரும் என்பதாம். 

வரலாறு     :  காளை  விடலை  என்பன  உயர்திணையினும்
அஃறிணையினும் வருமாதலின் விரவுப் பெயராயிற்று. பிறவுமன்ன. (43) 

ஐந்தாவது பெயரியல் முற்றிற்று.