பண்புபற்றி வந்தன :
கரியன், கரியள், கரியர் என்பன.
அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும் என்பது -- அக்கூறப்பட்ட சொல் குறிப்பாய்த் தோன்றும் என்றவாறு.
அன்மைபற்றிப் பிறந்தன :
அல்லன், அல்லள், அல்லர் என்பன.
இன்மை : இல்லன், இல்லள், இல்லர் என்பன.
உண்மை : உளன், உளள், உளர் என்பன.
வன்மை : வல்லன், வல்லள், வல்லர் என்பன.
இனிப், ‘பிறவும்’ என்றதனான்,
நல்லன் நல்லள் நல்லர் எனவும்,
தீயன் தீயள் தீயர் எனவும்,
மூவாட்டையான், நாலாட்டையான், ஏழாட்டையான் எனவும், பிறவும் இவ்வாறு வருவனவெல்லாங் கொள்க.
ஈண்டுக் காட்டினவெல்லாம் படர்க்கை வினைக்குறிப்புச் சொல். இனி, ஈண்டு எடுத்தோத்தினானுங் கூறிய பொருளைப்பற்றித் தன்மைவினைக்குறிப்புச் சொல்வருமாறு ஒட்டிக்கொள்க.
தன்மை வினைக்குறிப்புச்சொல் : உடையென், உடையேம், உடையாம் என வரும். பிறவும் அன்ன. (16)
211.
பன்மையு மொருமையும் பாலறி வந்த
வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி யுயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
உரை :
பன்மைப்பாலும் ஒருமைப்பாலும் ஆகிய பெண் ஆண் என்று வேறுபாடு தோன்ற வந்த வினைக் குறிப்புச் சொற்களெல்லாம் மேற்சொல்லிப்போந்த இருபத்து மூன்று வினைச்சொற்கு ஈறாய எழுத்துக்களி லுள்ளனவே தமக்கும் ஈறாவன, பிறிதில்லை என்றவாறு.
‘அன்ன மரபின்’ என்றதனான், ஈண்டு உயர்திணைக்கு ஓதிய பொருட்பற்றி அஃறிணை வினைக்குறிப்புந் தோன்றும் என்று கொள்க.
வரலாறு :
‘வடாது வேங்கடம் தெனாது குமரி’ என்புழி, வடாது தெனாது என்பன ; இது வினைக்குறிப்புப் பெயர். பிறவும் அன்ன. (17)
212.
அஆ வஎன வரூஉ மிறுதி
யப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், அஃறிணைப்பாற்கு உரிய வினைச்
|