கிட, நட, வா, போ என்னுந் தொடக்கத்தன கொள்க. (24)
219.
இர்ஈர் பின்னென வரூஉ மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ்
சொல்லோ ரனைய வென்மனார் புலவர்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், முன்னிலைப்பன்மை வினைச்சொல் இவையென்று உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
இக்கூறப்பட்ட மூன்றும் பல்லோர்க்கும் பலவற்றிற்கும் ஒப்ப வுரியவாஞ் சொல் என்றவாறு.
இர் -- உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவிர் எனவும் ; இவை மூன்று காலமும் பற்றி வரும்.
ஈர் -- உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர் எனவும் ; இவை மூன்று காலமும் பற்றி வரும்.
மின் -- உண்மின், தின்மின் என எதிர்காலம்பற்றி வரும். (25)
220.
எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி
ஐம்பாற்கு முரிய தோன்ற லாறே.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், ஒழிந்துநின்றவற்றைத் தொகுத்து உரியவாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
அவற்றுள், முன்னிலைக்கு உரியவாகக் கூறப்பட்டவற்றை ஒழித்தொழிந்தவெல்லாம் மூன்றிடத்தும் நின்று இருதிணை ஐம்பாற்கும் உரிய என்றவாறு. (26)
221.
அவற்றுள்
முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு
மன்னா தாகும் வியங்கோட் கிளவி.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.
உரை :
முன்னிலை, தன்மை இரண்டிடத்துஞ் செல்வனவாகிய வியங்கோள்வினைச்சொல் சிறு வரவின என்றவாறு.
வரலாறு :
நீர் செல்க, நீ செல்க, யான் செல்க என வரும்.
இனி, அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க என்பன பெருவரவினவாம்.
222.
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
யவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச்
செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், இதுவும் எய்தியது விலக்குதல் நுதலிற்று.
உரை :
செய்யும் என்னுஞ் சொல், உயர்திணைப்
|