உண்பாக்கு வந்தான் எனப் பிறவும் இவ்வாறு வருவன கொள்க.
செய்தெனெச்சம் முன்வைத்தார் இறந்த காலத்ததாதலானும் பலவீற்றதாகலானும் என்பது. (29, 30)
225.
அவற்றுள்
முதனிலை மூன்றும் வினைமுதல் முடிபின.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், முதற்கணின்ற மூன்றெச்சத்திற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று.
உரை :
அம்முதற்கண் நின்ற மூன்றும் அவ்வினையாக்கி அம் முதல்கொண்டு முடியும் என்றவாறு.
வரலாறு :
உழுது வந்தான், உண்ணூ வந்தான், நகுபு வந்தான் எனத் தத்தம் வினைமுதல்கொண்டு முடிந்தவாறு.
உண்ணூ வந்தான் என்பது இப்பொழுது வழக்கினுள் உண்ணாவந்தான் என நடக்கும். (31)
226.
அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற்
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினையோ ரனைய வென்மனார் புலவர்.
இச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், அம் மூன்றன் றிறத்துப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
அவை மூன்றும் ஏற்ற வினைமுதலானே முடியுமெனப் பட்டன ; சினைப்பொருளது வினையெச்சமாயக் காலச் சினைச்சொற் பொருணிற்ப, அச்சினைப் பொருளது முதல்கொண்டு முடியினும் அமையும் என்றவாறு.
வரலாறு : கையிற்று வீழ்ந்தான், கையிறூ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் எனவரும்.
‘முதலொடு முடியினும்’ என்ற உம்மை சிறப்பும்மை ; அதனால், சினையொடு முடிதலே வலியுடைத்து என்பதூஉமாம்.
அது, கையிற்று வீழ்ந்தது, கையிறூ வீழ்ந்தது, கையிறுபு வீழ்ந்தது என வரும். (32)
227.
ஏனை யெச்சம் வினைமுத லானு
மான்வந் தியையும் வினைநிலை யானுந்
தாமியன் மருங்கின் முடியு மென்ப.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், ஒழிந்து நின்ற வினையெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று.
|