இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1275
Zoom In NormalZoom Out


டிச் செவ்வெண் வந்தவாறு. 

‘நினையல்வேண்டும்’     என்பது,     அவ்வெண்களெல்லாம்
தொகைபெற்றே நடக்கும் என்றவாறு. 

‘சாத்தன்     வந்தான்,  கொற்றன்  வந்தான்,  வேடன்  வந்தான்,
அம்மூவரும்    வந்தார்;   அம்மூவரும்   வந்தமையாற்   கலியாணம்
பொலிந்தது’ எனத் தொகைபெற்று வந்தவாறு. (45) 

289. என்று மெனவு மொடுவுந் தோன்றி
யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே. 

வரலாறு: 

‘உயர்திணைப் பெயரே யஃறிணைப் பெயரென்

றாயிரண் டென்ப’        [தொல். எழுத்து. புணரியல்-15] 

என்புழி, என்று என்பதனை முன்னுங் கூட்டி யுரைக்க. 

‘கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை’

                        [தொல். எழுத்து. நூன்மரபு - 7] 

என்புழி, என என்பதனை முன்னுங் கூட்டி யுரைக்க. 

‘நிலனே நீரே தீயே வளியே
யாகா யத்தோ டைந்தே பூதம்’ 

என்புழி, ஒடுவினை எங்குங் கூட்டி யுரைக்க. (46) 

290. அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென
மெய்பெறக் கிளந்த வியல வாயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
திரிந்துவேறு வரினுந் தெரிந்தனர் கொளலே. 

மேல்  ஓதப்பட்ட  சொற்கள்   கூறப்பட்ட   இலக்கணத்தவன்றிப்
பிறபொருள்பட்டு வருப வுளவேனும் கொள்க. 

வரலாறு:  

‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ [அகம் - 46] 

என்புழி, ஓகாரம் ஈற்றசையும் ஆயிற்று. 

‘கலங்கொண்டன கள்ளென்கோ
காழ்க்கொண்டன சூடென்கோ’ 

என, ஓகாரம் எண்ணோகாரம் ஆயிற்று. 

‘ஒர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ [அகம்-273] 

மா  முன்னிலை  அசைச்சொல்  ஆயிற்று,   வியங்கோட்கு  ஓதிய
அசைச்சொல். 

‘அதுமற் கொண்கன் றேரே’ 

என்புழி, மன் அசைச்சொல் ஆயிற்று. (47) 

291. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. 

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ   வெனின்,   இவ்வோத்திற்கெல்லாம்
புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

உரை : இது மேற்சொல்லப்பட்டன அன்றி வரும் இடைச்