388.
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை.
உரை : மொழிப்பொருள்கள் என்பன அச்சொல்லப்பட்ட பொருள்கள் அப்பொருட்கட்டே என்றவாறாம். ()
389.
எழுத்துப்பிரிந் திசைத்த லிவணியல் பின்றே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், புறனடை போல்வதோர் விதி கூறுதல் நுதலிற்று.
உரை : எழுத்துக்கள் பிரிந்திசைக்கப்படா.
உரிச்சொல் என்றவை பிறிதிலக்கணமும் உடைய என்பது போந்ததாம். என்னை பிறிதிலக்கணமெனின்,
‘தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலும்’
உடைய இவையும் என்பது.
யாதோவெனின்,
கடியென் கிளவி,
‘கடும்புனல்’ (குறுந் - 103)
என்றாயிற்று.
நம்பு எனப்பட்டது,
‘நம்பி’
என்றாயிற்று. பிறவும் அன்ன.
இனி,
‘உருகெழு தோற்றம்’
என்புழி, உரு என்பதூஉம் கெழூஉ என்பதூஉம் உரிச்சொல். (97)
390.
அன்ன பிறவுங் கிளந்த வல்ல
பன்முறை யானும் பரந்தன வரூஉ
முரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்ட
வியன்ற மருங்கி னினைத்தென வறியும்
வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்
தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற்
பாங்குற வுணர்த லென்மனார் புலவர்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் ஓர் புறனடை.
உரை : அச் சொல்லிப்போந்த உரிச் சொற்களன்றி அவைபோல்வன பிறவும் உலகத்துப் பலவாற்றானும் பரந்து வரும் உரிச்சொல் எல்லாவற்றையும் இசையும் குறிப்பும் பண்பும் என்னும் மூன்று வகைப்பட்ட பொருளையுஞ் சார்த்தி யுணர்த்துதற் குறைகூட்ட அம் மூன்று பொருண்மைக்கண்ணும் அவை யித்துணையே என்று வரையறுக்கும் வரையறை யின்மையின் முன்னர் உரிச்சொற்கு ஓதப்பட்ட இலக்கணத்திற் பிழையாமல் ஓம்படை யாணையிற் கிளந்தவற் றியலான் உணர்க என்றவாறு.
‘ஓம்படை யாணை’ என்பது பாதுகாவல்பற்றிய ஆணை.
‘அருமை, இருமை, கருமை, சேண்மை என்னுந் தொடக்கத்தனவற்றைப் பிறநூலார்,
‘இருமை பெருமையுங் கருமையுஞ் செய்யும்’
என்றும்,
‘தொன்றென் கிளவி தொழிற்பயில் வாகும்’
என்றும் எடுத்தோதுப’ என்பதும் அது. (99)
எட்டாவது உரியியல் முற்றிற்று.
|