ஒன்பதாவது
எச்சவியல்
391.
இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே.
என்பது சூத்திரம்.
இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எல்லா வோத்தினுள்ளும் எஞ்சிய பொருள்களை யுணர்த்தினமையின் எச்சவியல் என்னும் பெயர்த்து.
இனி, இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இத்துணைப்பட்ட சொல்லினாற் செய்யுள் செய்யப்பெறும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை : இயற்சொல்லும் திரிசொல்லும் திசைச்சொல்லும் வடசொல்லும் என நான்கும் செய்யுள் செய்தற்குரிய சொல்லாதல் உடைய என்றவாறு.
இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நாட்டு விகாரமின்றித் தமிழியற்கை யிலக்கணப்பாடு செவ்வனுடைய சொல் ; அவை முன்னர் உணர்த்துப.
திரிசொல் என்பது செய்யுளின்ப நோக்கி அவ்வியற் சொற்களை அவ்வாய்பாடு திரித்து வேறு வாய்பாட்டவாக்குஞ் செய்யுளுடைய சொல்.
என்னை,
‘சேரிச் சொல்லின் முட்டுற லஞ்சிச்
செய்யுட்குப் புலவர் செய்துகொண் டன்றே’
என்பது * புறச் சூத்திரம்.
அவைதாம் வழக்கினுள் இன்மை காரணம் அமைதல் என்பவாகலின், அவையும் முன்னர் உணர்த்துப.
திசைச்சொல் என்பது செந்தமிழ் நாட்டை அடையும் புடையுங் கிடந்த திசைநாட்டார் வழங்குஞ் சொல் ; அவையும் முன்னர் உணர்த்துப.
வடசொல் என்பது ஆரியச் சொற்போலுஞ் சொல் ; அவை முன்னர் விரித்துரைப்ப.
பெயர், வினை, இடை, உரி எனப்பட்ட நான்கு சொல்லுமே இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனப்பட்டன ; பிறவில்லை.
திரிசொல் செய்யுட்கே உரிய. ஒழிந்த மூன்றும் வழக்கிற்குரியவாகிச் செய்யுட்கும் புகும் என்றவாறு. (1)
392.
அவற்றுள்
இயற்சொற் றாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொ
|