இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1298
Zoom In NormalZoom Out


நுதலிற்று. 

உரை  :  வடசொற் கிளவி என்று சொல்லப்படுவது ஆரியத்திற்கே
உரிய  எழுத்தினை  ஒரீஇ  இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை
யுறுப்பாக வுடையவாகுஞ் சொல் என்றவாறு. 

அவை, உலகம் குங்குமம் நற்குணம் என்னுந் தொடக்கத்தன. 

குங்குமம்     என்றவிடத்து  இருசார்க்கும்  பொது  எழுத்தினான்
வருதலுடைமையும்    ஆரியத்தானும்    தமிழானும்   ஒருபொருட்கே
பெயராகி வழங்கி வருதலுடைமையும் அறிக. (5) 

396. சிதைந்தன வரினு மியைந்தன வரையார். 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,  இதுவும்  வடசொற்கிளவி
யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உரை : இருசார் எழுத்திற்கும் ஒத்த வழக்கினான் வாராது சிதைந்து
வந்தனவாயினும்  பொருந்தி  வந்தன வரையப்படா வடசொல் லாதற்கு
என்பது. 

அவை, 

‘நிதியந் துஞ்சும்’                          (அகம்-227)

எனவும், 

‘தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்’   (நெடுநல்-115)

எனவும் வரும். (6) 

397. அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலு மெலிக்கும்வழி மெலித்தலும்
விரிக்கும்வழிவிரித்தலுந் தொகுக்கும்வழித்தொகுத்தலும்
நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்
நாட்டல் வலிய வென்மனார் புலவர்.
 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,  அந் நான்கு   வகைச்
சொல்லானும்    செய்யுட்    செய்யுமிடத்து   இவ்வறு   வகைப்பட்ட
விகாரமும்படச் செய்யுட் செய்யப்பெறுப என்பது உணர்த்தியவாறு. 

உரை : நாட்டல்  வலிய  என்றது -- ஒருவன்  நாட்டுதல் வன்மை
யிலக்கணத்தினை அவை உடைய என்றவாறு. 

வலிக்கும்வழி வலித்தல் : 

குறுந்தாட் கோழி என்பதனைக், 

‘குறுத்தாட் கோழி’ 

என வலித்தல். 

மெலிக்கும்வழி மெலித்தல் : 

தட்டை எனற்பாலதனை, 

‘தண்டை’ 

என மெ