இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1323
Zoom In NormalZoom Out


அவற்றுட்    சொல்லி    என்றானும்   சொல்ல   என்றானும்   ஆக,
இரண்டனுள் ஒன்றனான் முடியும் அது என்பது. 

‘முன்னும்’ என்றது, தா எனச் சொல்லி நின்றாள் என்று கொணர்ந்து
முடிப்பின், அது பின் முடிவுபட நின்றதாம் என்பது. (45) 

436. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,  இது  ‘தகுதியும் வழக்கும்’
(தொல்.   சொல்.  கிளவி  -  17)  என்பதனுட்  கூறப்படாது  ஒழிந்து
நின்றதோர் மரபுவழூஉக் காத்தல் நுதலிற்று. 

உரை :   நன்மக்களுட்  கூறப்படாத  சொல்லைக்   கிடந்தவாறே
சொல்லற்க ; பிறிது வாய்பாட்டான் மறைத்துச் சொல்லுக என்றவாறு. 

வரலாறு  :  ‘கான்மே  னீர்பெய்தும்’  ‘வாய்பூசி   வருதும்’   என வரும். (46) 

437. மறைக்கும் காலை மரீஇய தொரால். 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இறந்தது காத்தது. 

உரை :   மேல்  அவைக்குரியவல்லனவற்றை  மறைத்தே சொல்லுக
என்றார்,   இனி  அவைதாம்  மரீஇயடிப்பட்டவழியாயக்கால்  மறைக்க
வேண்டுவதன்று  ;  அவை  யொழித்து ஒழிந்தன மறைத்தே சொல்லுக
என்றது என்பது. 

இனி, அவ்வாறு மரீஇவந்தன : 

‘ஆட்டுப் பிழுக்கை’, ‘ஆப்பி’ என வரும். (47) 

438. ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று
மிரவின் கிளவி யாகிட னுடைத்தே.
 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ  வெனின்,  இதுவும்  கிளவியாக்கத்துக்
கூறப்படாது ஒழிந்துநின்றதோர் மரபிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : இக்  கூறப்பட்ட  மூன்றும்  இரப்போர்  சொல்லுதற்குரிய
என்றவாறு. 

ஒருவரை யொருவர் இரக்குங்கால் இம்  மூன்றனுள்  ஒன்றுசொல்லி
யிரப்பது என்றவாறு. (47) 

439. அவற்று
ளீயென் கிளவி யிழிந்தோன் கூற்றே.
 

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  மேற் கூறப்