நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   474
Zoom In NormalZoom Out


பொருளின்  பகுதியாகிய  காட்சிப்  பொருளுங்,  கருத்துப்  பொருளும்
அவற்றின்   பகுதியாகிய  ஐம்பெரும்பூதமும்,  அவற்றின்  பகுதியாகிய
இயங்குதிணையும்  நிலைத்  திணையுமாம். இவை யெல்லாம் ஐம்பாலாய்
அடங்கின. 

இனிப்  பொருட்டன்மையாவது, மக்கட்டன்மையும் இயங்கு திணைத்
தன்மையும்    நிலைத்திணைத்   தன்மையுமாம்.   இத்தன்மை,   ஒரு
பொருட்குக் கேடு பிறந்தாலுந் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய்ப்
பலவகைப் பட்ட பொருடோறும் நிற்குமென்றுணர்க. 

கருவியாவது,    அப்பொருட்டன்மையை    ஒருவன்   உணர்தற்கு
அவ்வோசை   கருவியாய்   நிற்றல்.   இஃது  ஐம்பொறிகள்  ஒருவன்
பொருளை   உணர்தற்குக்   கருவியாய்   நின்றாற்போலக்  கருவியாய்
நிற்குமென்றுணர்க. 

இனி,  ‘ஓசையைச்  சொல்  என்றீரேல்,  கடலொலி சங்கொலி விண்
ணொலி முதலியனவுஞ் சொல்லாகாவோ?’ எனின், சொல்லு ‘இது முன்பு
யான்   உணர்ந்த   எழுத்து,’  என்றே  பின்பு  கூறியக்காலும்  உணர
நிற்றலின்,  கேடின்றி   நிலைபேறுடையதாயிற்று.   இவை   அங்ஙனம்
உணர்தலாற்றாமை   யானும்,   எழுத்தினான்   ஆக்கப்படாமையானும்
நிலைபேறிலவாயின;  ஆதலின்,  சொல்  எனப்படா. அன்றியும், ‘ஓசை,
அரவம்,  இசை’  என்பன போலன்றிக் ‘கிளவி, சொல், மொழி’ என்பன
எழுத்தினானாகிய  ஓசையை  உணர்த்தும்.  முற்கு,  வீளை  முதலியன,
எழுத்தினான் ஆக்கப்படாமையின், சொல்லாகா. 

இனி  ஒரு  சாரார், எழுத்தினானாகிய ஓசையையுங் கெடும் என்பர்.
உரையாசிரியரும்;   ‘சொல்லென்பது   எழுத்தினான்  ஆக்கப்பட்டுத்
திணை யறிவுறுக்கும் ஓசை;’ என்றும், ‘தன்