|
தான் என்னும் விரவுப்பெயர்
187.
தானென் கிளவி ஒருமைக் குரித்தே.
இது, தான் என்பது இருதிணைக்கும் உரித்தாமாறு கூறுகின்றது.
(இ-ள்.)
தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே-தான் என்னும்
பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமைப்பாற்கு உரித்து, எ-று.
(எ-டு.) தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது எனவரும். (31)
எல்லாம் என்னும் விரவுப்பெயர்
188. எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.
இஃது, எல்லாம் என்பது இரு திணைக்கும் உரித்தாமாறு கூறுகின்றது.
(இ-ள்.) எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி-எல்லாம் என்னும் பெயராகிய நிலைமையை உடைய சொல், பல் வழி நுதலிய நிலைத்து ஆகும்மே-இருதிணைக்கண்ணும் பன்மை இடத்தைக் கருதின நிலைமைத் தாய் வரும், எ-று.
(எ-டு.) எல்லாம் வந்தேம் - வந்தன என வரும்.
‘மேனியெல்லாம் பசலை ஆயிற்று’ என்பது, எஞ்சாப் பொருட்டு
ஆயதோர் உரிச்சொல். (32)
எல்லாம் என்பது உயர்திணைக்கண் பெரும்பான்மை
தன்மைப்பன்மைக்கு வருதல்
189.
தன்னுள் ளுறுத்த பன்மைக் கல்லது
உயர்திணை மருங்கின் ஆக்க மில்லை.
இஃது எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது.
(இ-ள்.) உயர்திணை மருங்கின் தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது ஆக்கம் இல்லை-எல்லாம் என்னுஞ் சொல் உயர்திணைக்கண் வருங்கால் தன்மைப்பன்மைக்கு அல்லது பெரும்பான்மை வாராது, எ-று.
எனவே, சிறுபான்மை முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் வருமாயிற்று.
(எ-டு.)
‘கண்டவிர் எல்லாம் கதுமென வந்தாங்கே
பண்டறியா தீர்போல நோக்குதிர்’
(கலி.140:1.2)
‘ஊடினீர் எல்லாம் உருவிலான் தன்னாணை
கூடுமின் என்று குயில்சாற்ற’
(சிலப். 8:இறுதி)
என முன்னிலைக்கண்ணும்,
‘நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம்
சிறுபாக ராக’ (கலி. 97: 28,29)
எனப் படர்க்கைக்கண்ணும் வந்தன. (33)
|