|
நடக்கும் இடத்து அஃறிணையை உளப்படுத்தித் திரிவன உள, எ-று.
(எ-டு.) ‘யானுமென் எஃகமும் சாறும். இஃது அஃறிணையை உளப்படுத்தல் ‘தன்மைச்சொல்’ (43) என்னுஞ் சூத்திரத்தான் வந்தது.
(12)
‘யார்’ உயர்திணை முப்பாற்கும் உரித்தாதல்
212.
யாஅர் என்னும் வினாவின் கிளவி
அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே.
இஃது, உயர்திணை வினைக்குறிப்பினுள் ஒன்று கூறுகின்றது.
(இ-ள்.) யாஅர் என்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே-யார் என்னும் வினாப்பொருளை உணர்த்துஞ் சொல் உயர்திணை மருங்கின் மூன்று பாற்கும் உரித்து, எ-று.
(எ-டு.) அவன் யார்? அவள் யார்? அவர் யார்? இது, வினைக் குறிப்பாயினும், பல்லோர் படர்க்கையை உணர்த்தும் ஆர் ஈற்றான் மூன்று பாலையும் உணர்த்துதலின், அவற்றொடு
வையாது ஈண்டு வைத்தார். ‘உயர் திணைக்கு உரித்து’ எனவே, அஃறிணைக்கு உரித்தன்றிச் சிறுபான்மை வருதல் கொள்க. அஃது,
‘ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்தெங்
கோதைகூட் டுண்ணிய தான்யார்மன்-போதெல்லாம்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு?’ (நன். சூ.349 உரை)
என உண்ணிய வண்டுதான் யார்? என அஃறிணைக்கண் வந்தது.
இது திணை வழுவமைதி என்றலும் ஒன்று. (13)
ஆன் ஆள் ஆர் ஈற்று ஆ, செய்யுளுள் ஓஆதல்
213.
பாலறி மரபின் அம்மூ வீற்றும்
ஆஓ ஆகுஞ் செய்யு ளுள்ளே.
இஃது, அவ்விருபத்துமூன்று ஈற்றினுள் மூன்று ஈறு செய்யுளுள் திரியுமாறு கூறுகின்றது.
(இ-ள்.) பால் அறி மரபின் அம்மூவீற்றும் - பால் விளங்க வரும் இயல்பையுடைய ஆன், ஆள், ஆர் என்னும் மூன்று ஈற்றின்கண்ணும், ஆ ஓ ஆகும்
செய்யுளுள்ளே - ஆகாரம் ஓகாரமாஞ்
|