|
என்பது உணர்த்துதற்கு முன்னிலையை முற்கூறினார். இனி, எழுத்தோத்தினுள், ‘ஏவல் கண்ணிய வியங்கோட்கிளவியும் (210) என அகர ஈற்றுள் எடுத்து ஓதினமையாற் பொருந்திய மெய்யை ஊர்ந்து அகர ஈறாய் வருதலும்; உடம்பொடு புணர்த்தல் என்பதனான், ‘வழாஅல் ஓம்பல்’ (13) எனவும், ‘இற்றெனக் கிளத்தல்’ (19) எனவும், ‘ஆக்க மொடு கூறல்’ (20) எனவும் வந்த அல் ஈறும், ‘மரீஇய தொராஅல்’ (443) என வரும் ஆல் ஈறுமாய் வருதலும், ஒன்றென முடித்தல் என்பதனான் வாழியர் என்னும் அர் ஈறும், மறைக்கண், ‘காணன்மார் எமர்’ (நற்.64) என்னும் மார் ஈறும், ‘வாழ்த்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்’ (புறம். 367:6 ) என்னும் உம் ஈறும், ‘அஞ்சாமை அஞ்சுவ தொன்றின்’ என்னும் ஐகார ஈறுமாய் வருதலுங் கொள்க.
|