|
இனி, ஆகு, போகு எனக் குற்றுகர ஈற்றான் முதல்நிலை ஆயிற்றெனின், ஆகினான், போகினான், என முற்றும் அதன்கண்ணே தோன்றுதல் வேண்டும். அங்ஙனம் வழங்காமையின் ஆ, போ என்பன முதல்நிலையாய்க் காலங் காட்டும் யகர ஒற்றுப் பெற்று ஆயினான், போயினான் என முற்றும் அதன் கண்ணே தோன்றுதலின் ஆகு, போகு எனக் குற்றுகர ஈற்று முதல்நிலை இன்றாமென்று உணர்க. இதனானே வினையெச்சம் முற்றாய்த் திரியும் என்பதும் உணர்க. அவை தூயினான், தாயினான், மேயினான், ஏயினான், சினைஇயினான், முனைஇயினான், உரைஇயினான், மரீஇயினான், உடீஇயினான், கடைஇயினான், தழீஇயினான், குழீஇயினான், பாராயினான்.
விராயினான், நிலாயினான் கலாயினான் என வரும். இவை இங்ஙனம் முற்றாய்த் திரிதலின்,
பெயர்கொண்டு முடிவன ஆயின. ஆய், போய் என்பன, ‘வினை யெஞ்சு கிளவியும் வேறுபல்
குறிய’ (457) என்பதனான் திரிந்து நிற்கும் என்பது கோடலின், திரிந்து நின்றன. அச்சூத்திரத்து வினையெச்சம் முற்றுவினை கொள்ளுமாறுங் காட்டுதும். முன்னர்க் காட்டிய உதாரணங்களுள் உகரம் இகரமாய்த் திரியாமையும் இவ்வாறே பிரித்து உணர்ந்து கொள்க.
|