|
இது பெயரெச்சக் குறிப்பு; உழுது பயன்கொண்டு - இது வினையெச்சம்; உழுது அன்றி உண்ணான்-இது வினையெச்சக் குறிப்பு. (31)
இதுவும் அது
231.
பின்முன் கால்கடை வழியிடத் தென்னும்
அன்ன மரபிற் காலங் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றியல் பினவே.
இதுவும் ஒருசார் வினையெச்சம் உணர்த்துகின்றது.
(இ-ள்.) பின் முன் கால் கடை வழி இடத்து என்னும் கிளவியும் - பின்னும் முன்னும் காலும் கடையும் வழியும் இடத்தும் என்னும் ஈற்றவாகிய சொற்களும், அன்ன மரபிற் காலம் கண்ணிய என்ன கிளவியும் - அம் முறைமைபோலக் காலத்தைக் குறித்த எல்லாச் சொற்களும், அவற்று இயல்பின-முற்கூறிய ஒன்பதும் போல வினையெச்சத்திற்கு வாய்பாடாம் இயல்பை யுடைய, எ-று.
(எ-டு.) பின்: நீயிர் பொய் கூறியபின் மெய்கூறுவார் யார்? ‘இளமையும் தருவதோ இறந்த பின்னே?’ (கலி. 15:26) என இறப்பும், நீ இவ்வாறு கூறு கின்றபின் உரைப்பது உண்டோ? என நிகழ்வும்பற்றி வரும். முன்: ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை’ (குறள். 435) என இறப்புப்பற்றி வரும். இவை, பின்னர், பின்னை, முன்னர், முன்னை எனத் திரிந்தும் வரும். கால்: ‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்’ (கலி. 35:15) என இறப்பும், ‘அகன்றவர் திறத்தினி நாடுங்கால்’ (கலி.16:3,4) என நிகழ்வும் எதிர்வும்பற்றி வரும். கடை: ‘தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை’ (கலி. 22:21,22) என இறப்புப்பற்றி வரும். வழி: ‘விடுவழிச் விடுவழிச் சென்றாங்கவர், தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே’ (கலி. 130:20,21) என இறப்பும், ‘அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே!’ (அகம். 49: 17,18) என நிகழ்வும், உரைக்கும்வழி என நிகழ்வும் எதிர்வும்பற்றி வரும். இடத்து: ‘களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து’ (குறள். 879) என இறப்பும், உரைக்குமிடத்து என நிகழ்வும் எதிர்வும்பற்றி வரும்.
அன்னமரபின்
|