|
என்றதனான், பான், பாக்கு, வான், வாக்கு என்பனவுங் கொள்க.
(எ-டு.) ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்’ (நான்மணி.28) ‘திருவிற்றான் மாரி கற்பான் துவலைநாட் செய்வதேபோல்’ (சீவக. 2070) ‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்’ (கார். 11)
‘கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்’
(பு.வெ.99) கொள்வாக்கு வந்தான் என வரும்.
அல்லது, அல்லால் என வரும் குறிப்பெச்சமுங் கொள்க. இவை பெயர்த்தன்மையும் உடையவாய் நின்று முன்வந்த வினையின் காலத்தை உணர்த்தி நிற்றலின், வேறு ஓதினார். ‘வேபாக்கு அறிந்து’ (குறள். 1128) என்பது வேதலை அறிந்து என்னும் பொருள் தருதலின், எச்சம் அன்று .இவற்றைக் ‘காலம் கண்ணிய’ என்றது,
கூதிர் போயபின் வந்தான் எனவும், நின்றவிடத்து நின்றான், எனவும் பின் முதலியன பெயரெச்சத்தொடு வந்துழி இறப்பு முதலியன கண்ணாமையின். (32)
வினைமுதல்வினை கொண்டு முடியும் வினையெச்சம்
232.
அவற்றுள்,
முதனிலை மூன்றும் வினைமுதல் முடிபின.
இது, முதல் நின்ற மூன்றற்கும் முடிபு கூறுகின்றது.
(இ-ள்.)
அவற்றுள் முதல்நிலை மூன்றும்-முற்கூறிய பதினைந்தனுள் முதற்கண் நின்ற ‘செய்து, செய்யூ, செய்பு’ என்னும் மூன்றும், வினைமுதல் முடிபின - அவ்வெச்ச வினையை நிகழ்த்தின கருத்தாவினது வினையினை உணர்த்துஞ் சொல்லினையே முடிபாகக் கொண்டு முடிதலை உடைய, எ-று.
(எ-டு.) உண்டு வந்தான்; உண்ணூ வந்தான்; உண்குபு வந்தான் எனவும், கற்று வல்லன் ஆயினான்; கல்லூ வல்லன் ஆயினான்; கற்குபு வல்லன் ஆயினான் எனவும் வரும். ஒன்றென முடித்தல் என்பதனான் செய்யா என்பதற்கும் உண்ணா வந்தான், என இம்முடிபு கொள்க.
இனி, செய்தெனெச்சக் குறிப்பாகிய இன்றி, அன்றி என்பனவும், ‘தம்மின் றமையா நந்நயந் தருளி’ (நற்.1) ‘தொல்லெழில் வரைத்தன்றி வயவு நோய் நலிதலின்’ (கலி. 29:1) என வினைமுதல் வினையான் முடியும். (33)
அம் மூன்றற்கும் முடிபு வேற்றுமை
அம்முக் கிளவியுஞ் சினைவினை தோ
|