நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   699
Zoom In NormalZoom Out


இடையியல்

இடைச்சொற்குப் பொது இலக்கணம்

251. இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. 

என்பது     சூத்திரம்.    நிறுத்த    முறையானே   இடைச்சொல்
உணர்த்துகின்றமையின்  இவ்வோத்து  இடைச்சொல்லோத்து  என்னும்
பெயர்த்தாயிற்று.   இச்சூத்திரம்,   இடைச்சொற்கெல்லாம்  இலக்கணங்
கூறுகின்றது. 

(இ-ள்.)    இடையனப்படுப-‘இடைச்சொல்’ என்று சொல்லப்படுவன,
பெயரொடும்   வினையொடும்   நடைபெற்று   இயலும்   -  பெயரும்
வினையும்  உணர்த்தும்  பொருளைச்   சார்ந்து  நின்று  அவற்றையே
வெளிப்படுத்து  நடக்கும்;  தமக்கு  இயல்பு  இல-தமக்கென வேறொரு
பொருளை உணர்த்தும் இலக்கணமுடைய அல்ல, எ-று. 

முன்னும்     பின்னும்     நிற்குமேனும்,      பெரும்பான்மையும்
இடையே நிற்றலின் இடைச்சொல் என்றார். 

(எ-டு.)    ‘அதுகொல் தோழி! காம நோயே?’ (குறுந். 5) ‘வருகதில்
அம்மவெம்  சேரி  சேர’  (அகம்.  276:7)  எனப் பெயரும் வினையும்
சார்ந்துநின்று, அவற்றின் பொருளை விளக்கின. 

தமக்கு   இயல்பில எனப் பொதுப்படக்கூறிய அதனான், சாரப்படும்
சொல்லின் வேறாய் நிற்றலேயன்றி, உண்டான், என்றிசினோரே, ‘அருங்
குரைத்து’ என அவற்றிற்கு உறுப்பாய் வருதலுங் கொள்க. (1) 

இடைச்சொற்களின் பாகுபாடு

252. அவைதாம்,
புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும்
வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிலைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை. 

இஃது, அவ்விடைச்சொற்க