நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   702
Zoom In NormalZoom Out


என்றா’ (53) என்னும் பொருளியற் சூத்திரத்தான் உணர்க. (2) 

இடைச்சொல் நிலைபெறும் இடமும் வேறுபாடும்

253. அவைதாம்,
முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலுந்

தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும்
அன்னவை யெல்லாம் உரிய வென்ப.  

இஃது, இன்னும் அவற்றுக்கு ஒரு பொதுவிதி கூறுகின்றது. 

(இ-ள்.)     அவைதாம் -  முற்கூறிய இடைச்சொற்கள் தாம் (இடை
வருதலே   அன்றி)    மொழி    முன்னும்     பின்னும்    அடுத்து
வருதலும்-தம்மாற் சாரப்படுஞ்  சொற்களை    முன்னும் பின்னும் தாம்
அடைந்து வருதலும், தம் ஈறு திரிதலும் -  தம் ஈற்றெழுத்து வேறுபட்டு
வருதலும்,  பிறிது  அவண் நிலையிலும் -  ஒரு இடைச்சொல் நிற்கின்ற
இடத்தே  மற்றோர்  இடைச் சொல் நிற்றலுமாகிய, அன்னவை எல்லாம்
உரிய   என்ப-அத்தன்மையை   உடைய   இலக்கணங்கள்   எல்லாம்
(இடைச்சொற்கு) உரிய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. 

(எ-டு.)    அதுமன், கேண்மியா-இவை முன் அடுத்தன. ‘கொன்னூர்
துஞ்சினும்’  (குறுந்.  138)  ஓஓ  இனிதே!  (குறள்.  1176)  இவை பின்
அடுத்தன. ‘உடனுயிர் போகுகதில்ல’ (குறுந்.7) இது திரிந்தது. ‘வருகதில்
அம்மவெம்   சேரி   சேர’   (அகம்.   276-7),  ‘பண்டறியாதீர்போல்
படர்கிற்பீர்   மற்கொலோ!’   (கலி.  39-38)-  இவை  பிறிது  நின்றன.
‘அன்னவை   எல்லாம்’   என்றதனான்,   ‘மன்னைச்சொல்லே’  (254)
‘கொன்னைச்  சொல்லே’  (256)  எனத்  தம்மை  உணரநின்றவழி ஈறு
திரிதலும்,   ‘னகாரை   முன்னர்’   (எ.52)  என  எழுத்துச்  சாரியை
ஈறுதிரிதலுங் கொள்க. (3) 

மன் என்னும் இடைச்சொல்லின் பொருள்

254. கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. 

இது,    தத்தங்   குறிப்பிற்   பொருள்   செய்வனவற்றுள் ஒன்றன் பொருட் பாகுபாடு கூறுகின்றது. 

(இ-ள்.)   மன்னைச் சொல் கழிவே ஆக்கம்  ஒழியிசைக்   கிளவி
என்று   அம்மூன்று  என்ப- மன்னைச்சொல்  கழிவுப் பொருண்மையும்
ஆக்கப்   பொருண்மையும்      எச்சமாய்    ஒழிந்து  நின்ற  சொற்
பொருண்மையும்     என்று     சொல்லப்பட்ட   அம்மூன்று    கூற்
றையுடையதென்று  கூறுவர் ஆசிரியர், எ-று. 

(எ-டு.)   சிறியகட்   பெறினே   எமக்கீயு   மன்னே!’ (புறம்.235-1)
‘புதுமலர் கஞல   இன்று  பெயரின்,  அதுமன்   எம்பரிசில்  ஆவியர்
கோவே! (புறம்.147-8,9)  ‘கூரியதொருவாள்மன்’  (இக்காலம்    திட்பம் இன்று) என வரும். (4)