|
படர்க்கைக்கண்ணும் வந்தன.
முருகாற்றுப்படையுள், ‘விளிவின், றிருள்நிற முந்நீர் வளைஇய உலகத், தொருநீ ஆகித் தோன்ற விழுமிய, பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்.......மலைகிழ வோனே!’ (முருகு. 292-295, 317) என மதி படர்க்கைக்கண்ணும் வந்ததனைத் ‘தகுநிலை உடைய’ என்றதனானாதல், ‘அவ்வச் சொல்லிற் கவையவை’ (297) என்னுஞ் சூத்திரத்தானாதல் அமைத்துக் கொள்க. அன்றி மதியை அறிவாக்கிப் பல அறிவுடனே நீ ஒருவனேயாகப் பரிசில் நல்கும் எனப் பொருள் கூறுவாரும் உளர்.
‘ஊனு மூணு முனையின்’ (புறம். 381) என்னும் புறப்பாட்டினுள், ‘சென்மோ
பெரும! எம்
விழவுடை நாட்டென’
என்பதனையுந்தன்மைக்கண் மோ வரும் என இவ்வாறு அமைத்தலும் ஒன்று. அன்றிப் பெரும, எம் விழைவுடை நாட்டே நீ செல் என்று சுற்றத்தார் தலைவனை நோக்கிக் கூற, அப் பொருநனும் பாட்டுடைத் தலைவனை நோக்கிப் பின்னுங் கூறினானாகப் பொருள் கூறுதலும் ஒன்று. (27)
அம்ம என்னும் இடைச்சொல்லின் பொருள்
278.
அம்மகேட் பிக்கும்.
இது, பொருள்படுமாறு கூறுகின்றது.
(இ-ள்.)
அம்ம கேட்பிக்கும்-அம்ம என்னுஞ் சொல் யான் கூறுகின்ற தனைக் கேள், என்று ஒருவர்க்குக் கேட்பிக்கும் பொருண்மையினை உணர்த்தி நிற்கும், எ-று.
சொல்லொடு பொருட்கு ஒற்றுமை கருதிக் கேட்பிக்கும் என்றார்.
(எ-டு.) ‘அம்ம வாழி தோழி!’ (ஐங்குறு. 31:குறுந்.77)
‘அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்’ (155) என்புழியும் பொருள் தந்தே நிற்குமாறு கூறியவாறு ஆண்டு உணர்க. (28)
ஆங்க உரையசை என்பது
279.
ஆங்க உரையசை.
இதுவும் அது.
(இ-ள்.)
ஆங்க உரையசை - ஆங்க என்னும் இடைச்சொல் கட்டுரைக் கண்ணே அசைத்த நிலையாய் வரும், எ-று.
கட்டுரை-புனைந்துரை. அசைத்தல்-சேர்த்தல்.
(எ-டு.) ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக், கேள்வனை விடுத்துப் போகி யோளே.’ என்புழி அங்ஙனே எனப் புனைந்துரைத்து நின்றது. சிறிது பொருள்
உணர்த்
|