நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   736
Zoom In NormalZoom Out


(அகம்.  198:3) எனவும், ‘பேரிசை நவிரம்  மேஎய்  உறையும், காரி
யுண்டிக்கடவுள்’ (மலைபடு. 82, 83) எனவும் வரும். (31) 

ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்: பொருள் 

330. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.

இதுவும் அது. 

(இ-ள்.)   ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் ஆவயின் நான்கும்-
ஓய்தல்,    ஆய்தல்,    நிழத்தல்,   சாஅய்   என்னும்   உரிச்சொல்
முதனிலையாகிய   அவ்விடத்து   வந்த  குறிப்புப்  பெயர்  நான்கும்,
உள்ளதன்    நுணுக்கம்-பண்டு   உள்ளது   ஒன்றனது   நுணுகுதலை
உணர்த்தும், எ-று. 

சாய்தல் விகாரப்பட்டது. 

(எ-டு.)     ‘வேனில்  உழந்த  வறிதுயங்  கோய்களிறு’  (கலி.7:1)
‘பாய்ந்தாய்ந்த  தானைப்  பரிந்தானா  மைந்தினை’  (கலி.6:2)  ‘நிழத்த
யானை  மேய்புலம்  படர’ (மதுரைக்.303) ‘கயலறல் எதிரக் கடும்புனல்
சாஅய்’ (நெடுநல்.18) என வரும். ஆய்ந்த தானை என்றது, பொங்குதல்
அவிதலான் நொசிந்த துகில் என்றவாறு. (32) 

புலம்பு என்பதன் பொருள் 

331.  புலம்பே தனிமை. 

இதுவும் அது. 

 (இ-ள்.) புலம்பே  தனிமை - புலம்பு  தனிமை  என்னுங்  குறிப்பு
உணர்த்தும், எ-று.
 

(எ-டு.)  ‘புலிப்பல்  கோத்த புலம்புமணித் தாலி’ (அகம். 7:18) என
வரும். தமி என்பத சொல் புறனடையாற் (389) கொள்க. (33) 

துவன்று என்பதன் பொருள் 

332. துவன்றுநிறை வாகும்.

இதுவும் அது. 

(இ-ள்)  துவன்று நிறைவு  ஆகும்-துவன்று நிறைவு  என்னுங்
குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.)  ‘ஆரியர்  துவன்றிய  பேரிசை இமயம்’ (பதிற்.11:23) என
வரும்.(34)
 

முரஞ்சல் என்பதன் பொருள்
 

333.

 முரஞ்சல் முதிர்வே

 

இதுவும் அது.

(இ-ள்.)  முரஞ்சல்  முதிர்வே -  முரஞ்சல்  முதிர்வு என்னுங்
குறிப்பு உணர்த்தும், எ-று.
 

(எ-டு.)  ‘கோடுபல  முரஞ்சிய  கோளி  ஆலத்து’  (மலைபடு.268)
என வரும். (35)
 

வெம்மை என்பதன் பொருள்
 

334.

வெம்மை வேண்டல்.

இது பண்பு. 

(இ-ள்.) வெம்மை  வேண்டல்-வெம்மை  விரும்புதலாகிய பண்பை
உணர்த்தும், எ-று.
 

(எ-டு.) ‘எம்வெங் காமம் இயைவ தாயின்’ (அகம். 15:1) என வரும்.
இது  ‘குழைமாண்  ஒள்ளிழை  நீவெய்  யோளொடு’  (அகம்.)  எனத்
திரிந்தும் நிற்கும். வெம்மை வெப்பம் உணர்த்துதல் வழக்கு. (36)
 

பொற்பு என்பதன் பொருள்
 

335.

 பொற்பே பொலிவு

 

இது குறிப்பு,

 

(இ-ள்.) பொற்பே பொலிவு-பொற்புப்  பொலிவு  என்னுங்  குறிப்பு
உணர்த்தும், எ-று.

 

(எ-டு.) ‘பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்’ (நற்.34) என
வரும். (37)