|
வறிது என்பதன் பொருள்
336. வறிதுசிறி தாகும்.
இதுவும் அது.
(இ-ள்.)
வறிது சிறிது ஆகும் - வறிது சிறிது என்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.)‘வறிதுவடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி’ (பதிற். 24:24) என வரும். (38)
எற்றம் என்பதன் பொருள்
337. எற்றம் நினைவுந் துணிவும்
ஆகும்.
இதுவும் அது.
(இ-ள்.)
எற்றம் நினைவும் துணிவும் ஆகும் - எற்றம் நினைவும் துணிவும் ஆகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘கானலஞசேர்ப்பன் கொடுமை எற்றி’ (குறுந்.145) ‘எற்றமி லாட்டியென் ஏமுற்றாள்’ (கலி. 144:63) என வரும். (39)
பிணை, பேண் என்பவற்றின் பொருள்
338. பிணையும் பேணும் பெட்பின் பொருள.
இது, குறிப்பும் பண்பும் உணர்த்துகின்றது.
(இ-ள்.)
பிணையும் பேணும் பெட்பின் பொருள-பிணையும் பேணும் பெட்பு என்னும் உரிச்சொல்லினது பொருளை உடையவாம், எ-று.
பெட்பு என்பது, புறந்தருதலும் விரும்புதலுமாகிய குறிப்பும் பண்பும் உணர்த்தும்; சிறுபான்மை, ‘பெட்ப நகும்,’ (சீவக.1662) எனப் பெருமையும் உணர்த்தும்.
(எ-டு.) அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும்.’ ‘யானும் பேணினெ னல்லனோ மகிழ்ந!’ (அகம்.16) இவை புறந்தருதல் உணர்த்தின. ‘பெற்றோர் பெட்கும் பிணையை ஆகென’ (அகம். 86) என்புழிக் கணவனைப் புறந்தரும் விருப்பத்தை உடையை ஆவாய் எனப் பிணை விருப்பத்திற்கு வந்தது.
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்’ (புறம். 99:1) இது விருப்பம் உணர்த்திற்று. ‘பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்’ (களவியல் சூத்திரம் 11) ‘காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்’ (கற்பியல் சூத்திரம் 6) என ஆசிரியர் பெட்பின் பகுதியாகிய பெட்டு என்னும் உரிச்சொல்லை உடம்பொடு புணர்த்து ஓதியவாறுங் காண்க. (40)
பணை என்பதன் பொருள்
339. பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்.
இது குறிப்பு.
(இ-ள்.) பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்-பணை பிழைத்த லாகிய குறிப்பு உணர்த்துதலே அன்றிப் பெருப்பு ஆகிய குறிப்பும் உணர்த்தும், எ-று.
பெருமையாகிய பண்பு உணர்த்தாது பெருத்தலாகிய குறிப்பு உணர்த்துதற்குப் பெருப்பு என்றார்.
(எ-டு.) அமர்க்க ணாமா னருநிற மூழ்காது1 பணைத்துவீழ்2 பகழிப் போக்குநினைந்து கானவன், (நற். 165) ‘வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டு’
|