நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   752
Zoom In NormalZoom Out


மயின்     - இசை, குறிப்பு, பண்பு பற்றித் தாம்   இயன்ற நிலத்து
இத்துணை  என  வரையறுத்து உணரும் எல்லை தமக்கு இன்மையான்
எஞ்சாமற்   கிளத்தல்   அரிதாகலின்,  வழி  நனி  கடைப்பிடித்து  -
அவற்றை    அறிவதற்கு   ஓதிய   வழிகளைச்   சேராமல்   மிகவுங்
கடைப்பிடித்து, ஓம்படை ஆணையிற் கிளந்தவற்று இயலாற் பாங்கு உற
உணர்தல்   என்மனார்   புலவர்   -   பாதுகாவலாகிய   ஆணையிற்
கிளந்தவற்றின்  இயல்பானே  அவற்றையும்  பகுதியுற  உணர்க என்று
சொல்லுவர் புலவர், எ-று.
 

‘ஆதலால்  யானும்   அவ்வாறே  கூறினேன்,’   என்றார்   எனக்
 குறிப்பெச்ச மாக உரைக்க.
 

எனவே,    ‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ (299) எனவும்,
‘முன்னும்   பின்னும்  வருபவை  நாடி’  (389)  எனவும்  யான் கூறிய
நெறியைச்    சேராமல்   கடைப்   பிடித்து,   ‘எச்சொல்   லாயினும்
பொருள்வேறு   கிளத்தல்’   (299)   எனவும்,   ‘ஒத்த   மொழியான்
புணர்த்தனர்  உணர்த்தல்,  தத்தம்  மரபின்  தோன்றுமன் பொருளே’
(389) எனவும் என்னான் தரப்பட்ட பாதுகாவ லாணையாற் கிளந்தவற்று
இயலாற் பாங்குற உணர்க, என்பது இதன் கருத்தாயிற்று.
 

‘உரிச்சொல் எல்லாம்,  கூட்ட வரம்பு  தமக்கு  இன்மையின் கடைப்
பிடித்து, இயல்பானே அவற்றை உணர்க,’ என வினைமுடிபு செய்க.
 

இருமை  என்பது   கருமையும்  பெருமையாகிய   குறிப்பும், சேண்
என்பது  சேய்மையாகிய  குறிப்பும்,  தொன்மை  என்பது பழமையாகிய
குறிப்பும்  உணர்த்துதலும்;  இவறல்  உலோபமும்,  ‘நொறிலியற்  புரவி
கழற்கால்   இளையோர்’   என   நொறில்   விரைவும்,  தெவிட்டுதல்
அசையிடுதலும்,    மலிதல்    நெருங்குதலும்,    மாலை    குற்றமும்
உணர்த்துதலும்; பிறவும் ‘கிளந்த அல்ல’ என்பதனாற் கொள்க.
                           (98)
 

உரியியல் முற்றிற்று.