நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   763
Zoom In NormalZoom Out


எமள்,     எமர் என வரும். விளிமரபில் முதலும் ஈறும் பற்றி ஓதி
இடையின்   விகற்பம்  கூறாமையின்,  தம்மான்,  நம்மான்,  எம்மான்
என்றாற்போலும் வாய்பாட்டு விகற்பமுங் கொள்க.
 

சேனாவரையர்,     தங்கிளை,  நங்கிளை,  நுங்கிளை,  எங்கிளை
என்பனவற்றை   ஒருமைக்குப்   பன்மைக்கும்   பொதுவாய்  நிற்கும்
என்றாரால் எனின், ஆசிரியர்,
 

‘தாம்என்  கிளவி பன்மைக் குரித்தே ’(186) ‘யாம் நாம்என வரூஉம்
பெயரும்’   (164)   என   இவ்வதிகாரத்து   எடுத்தோதிய  பன்மைச்
சொற்களை  எழுத்ததிகாரத்துள்  அவை  எழுவாயும்  பயனிலையுமாய்
நிற்கும்வழித்  திரியாது  புணரும் என்று கூறி, ‘தாம்நாம் என்னும் மகர
இறுதியும்’  (188)  என்னுஞ்  சூத்திரத்தான் அவை உருபு ஏற்கும்வழித்
திரிந்து புணரும் என்று கூறி, ‘நும்’ என்பதனை, ‘நும்மென் ஒரு பெயர்’
(325)  என்னுஞ்  சூத்திரத்தான்  உருபு  ஏற்குமாறு  கூறி,  ‘அல்லதன்
மருங்கின்’   (326)   என்னுஞ்   சூத்திரத்தான்   அஃது   எழுவாயும்
பயனிலையுமாய்   நிற்கும்வழி  ‘நீயிர்’  எனத்  திரிந்து  பன்மையாயே
நிற்கும்  எனவுங்  கூறிப்போந்தார் ஆதலின், ஈண்டும் அதற்கு ஏற்பத்
தம்முடைய கிளை, எம்முடைய கிளை எனப் பன்மை உணர்த்துதலன்றி
ஒருமை  உணர்த்தாமை  உணர்க.  ஏனையவும்  அன்ன, ‘தம்பொருள்
என்பதம் மக்கள்’ (குறள்.63) எனவும், ‘நம்ம னோர்க்கே’ (மலைபடு.402)
எனவும். ‘நும்ம னோருமற் றினைய ராயின், எம்ம னோரிவண் பிறவலர்
மாதோ’    (புறம்.210:3,4)   எனவும்   இந்நான்கு   சொல்லும்   அம்
முடிபுபெற்று,    முதனிலை    திரிந்து    நின்று,   பன்மைப்பொருள்
உணர்த்தியவாறு காண்க.
 

ஈண்டு  இவை வெற்பன் பொருப்பன் போலத் தம், நம், நும், எம்
என்பன  பிரிந்து  நின்று  பொருள்  உணர்த்திப் பின்வருகின்ற அன்,
அள்,  அர் என்பன பொருளுணர்த்தாது இடைச்சொல்லாயே நிற்றலின்,
பிரிப்பப் பிரியா, என்றார்.
 

இனி,  உம்மையை எச்சப்படுத்திப் பிற ஒட்டுப்பெயர்களும் பிரிப்பப்
பிரியா  எனப்  பொருள்  கூறி,  இம்பர்,  உம்பர்,  இம்மை,  உம்மை,
எம்மை,  என்றாற்போல்வன  பிறவும் இவ்விடம், உவ்விடம், இப்பிறப்பு,
உப்பிறப்பு, எப்பிறப்பு என்னும் பொருளுணர்த்தி நிற்குமென்று கொள்க.
                                                       (14)