|
‘ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும்’ (எ.482) எனவும், ‘செய்யும் செய்த என்னும் கிளவியின், மெய்யொருங்கியலும் தொழில் தொகு மொழியும்’ (எ.482) எனவும், ‘உருபுதொக வருதலும்’ (105) எனவும், ‘மெய்யுருபு தொகாஅ இறுதியான’ (106) எனவும், ‘பண்புதொக வரூஉம் கிளவி யானும்’ (418) எனவும், உம்மை தொக்க பெயர்வயினானும்’ (418) எனவும், ‘வேற்றுமை தொக்க பெயர்வயினானும்’ (418) எனவும், ‘உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி’ (எ.223) எனவும் ஆசிரியர் தொக்கே நிற்கும் எனச் சூத்திரம் செய்தலின், வேற்றுமை உருபும் உவம உருபும் உம்மும் வினைச்சொல் ஈறும் பண்பு உணர்த்தும் ஈறும் இத் தொகைச் சொற்கள் அல்லாததொரு சொல்லும் தொக்குநிற்றலின், தொகைச் சொல் என்பதே அவர் கருத்தாயிற்று. ஆயின், ‘கேழற்பன்றி’ (புறம்.152:4) ‘வேழக்கரும்பு’ (பெரிய. ஏனாதி.2) என்பவற்றிற்குத் தொக்கன இன்மையின், தொகைச் சொல் ஆமாறு என்னை? எனின் அவற்றிற்கும் ஒன்றை ஒன்று விசேடித்து நிற்கின்ற தன்மையை உணர்த்துதற்கு வரும் ஆகிய என்னும் வாசகம் தொக்கு நின்றது என்றே கோடும். அன்றித் ‘தன்கண் தொக்கன இன்றி அங்ஙனம் வாசகம் தொக்கு நின்றது தொகை என்றற்குச் சாலாமையின், அதனை ஒட்டி ஒரு சொல்லாய் நின்று தம் பொருள் உணர்த்தும் என்று கொண்டு ஏனையவற்றையும் அவ்வாறே கோடும்,’ எனின், எடுத்தோத்தினும் இலேசு சிறத்தல் யாண்டும் இன்மையின், அது பொருந்தாது. என்னை? அவ்விரு பெயரொட்டுப் பண்புத்தொகை அறுவகைத் தொகைச் சூத்திரங்களுள் எடுத்தோத்து இன்றி ‘என்ன கிளவியும்’ என்ற இலேசினான் கொண்டதாகலின். ஆயின்,
|