|
அதன் குணம் நுதலி - பின் வருகின்ற அப்பொருளின் குணத்தைத்
தான் கருதி, வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் வரூஉம் இயற்கைக் கிளவியும்-அப்பொருட் குணமாகிய வண்ணத்தின்
கண்ணும் வடிவின்கண்ணும் அளவின்கண்ணும் சுவையின்கண்ணும்
வரும் இயல்பாகிய கிளவியும், அன்ன பிறவும்
என்று வரூஉம் கிளவியும்-அவை போல்வன பிறவும் என்று சொல்லப்பட்டு வருங் கிளவியும், என்ன கிளவியும்-எத்தன்மையவாகிய சொற்களும்,
பண்பின் தொகை-பண்புச் சொல் தொக்க தொகையாம், எ-று.
‘பண்பு’ எனப் பண்புச்சொல்லை உணர்த்திற்று, ஆகுபெயராய். எழுத்ததிகாரத்து, ‘உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின், ஐம்பால் அறியும் பண்பு தொகு மொழியும்’ (எ.482) என்புழிப் பண்புத்தொகை ஐந்து பாலையும் உணர நிற்றலின், அங்ஙனம் நின்றன பிரித்துப் புணர்த்தற்கு இயையா என்றமையான், ஈண்டும் அதற்கு ஏற்ப இயற்கை என்றார். ‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’ என்பதன் பொருள், ஐந்து பாலையும் ஒருவன் அறிதற்குக் காரணமாகிய பண்புச்சொல் தொக்க தொகைச் சொல்லும் என்றவாறாம். பண்பு உணர்த்துகின்ற அவ்வாசகம் தோன்ற இன்னது என்றார். ஐம்பாலும் பொருள் என்றால், அஃறிணையாய் அடங்கும் ஆதலின், பொருளாக்கி இது என்று அஃறிணையான் கூறினார். இந்நான்கனுள் வண்ணமும் அளவுஞ் சுவையும் ஐம்பாற்கண்ணும் வரும்.
(எ-டு.)
வண்ணம்: ‘கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி, கரும்பார்ப்பார்
கருங்குதிரை, கருங்குதிரைகள்’ என்னும் பண்பு உணர்த்தும்
ஈறுகள் தொக்கனவற்றை விரிப்புழிக் ‘கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள்’ எனப் பண்பு உணர்த்தும் ஐம்பால்
ஈற்றினையும் விரித்தவாறு காண்க. ‘கரிய பார்ப்பான்’ என்பது ஈறு தோன்றாத பெயரெச்சக் குறிப்பாய் நிற்கும். இனி, ‘வெம்மை’ முதலியவற்றிற்கும் இவ்வாறே ஒட்டுக. இவற்றுள் ‘குரு’ ஒழிய ஏனைய தொக்கவாறு காண்க. இவற்றுள் அஃறிணைக்கண் வரும் ஈறுகள் பண்புகொள்பெயராய் நிற்குமாறும் உணர்க.
இனி, அளவு : ‘குறுமுனி (கல். 62-20) குறுமகளாடிய,
ஊர்க் குறுமாக்கள்’ (புறம். 94-1) குறுந்தாட் கூதளி, குறுங்கோட்டன’ என்பன வற்றையும் அவ்வாறே விரிக்க. இனி, ‘வெம்மை ‘ முதலியவற்றிற்கும் இவ்வாறே ஒட்டுக.
இனி, சுவை : ஐம்பொறியான் நுகர்தற்கு உரிய
இனிமைகளை உணர்த்தும் ‘சாயல் மார்பிற் கமழ்தார் குழைத்த’ எனவும், ‘தீங்கரும்ப னுக்கிய’ எனவும், ‘தீம்புகை கமழ ஊட்டி’ எனவும், ‘உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்’ எனவும், ‘தீந்தொடை நரம்பின்’ எனவும் மெய்யானும் நாவானும் மூக்கானும் கண்ணானும் செவியானும் நுகரும் இனிமையை உணர்த்தின. இவற்றை விரிப்புழி அஃறிணை இருபாற்கும் ஏற்ப ‘இனிதாகிய மார்பு, தீவியன
|