நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   780
Zoom In NormalZoom Out


ஓர் ஈற்றின்கண்ணே கொள்க. 

(எ-டு.) சென்றனை,  கரியை  எனவும்  வரும்.  ஈண்டுக்  காலமுங்
குறியீடும் கூறினா ரேனும், ‘வந்தது கொண்டுவாராத துணர்த்தல்’என்னும்
உத்தி   பற்றி  வினையியலுள்  காலமும்  குறியீடும் விரித்து ஆசிரியர்
எல்லாரும் உரையும் காண்டிகையும் கூறினார்  என்று  உணர்க.  இவை
முற்றி நிற்குமாறு ‘அவற்றொடு வருவழி’ (237)  என்னுஞ்  சூத்திரத்துள்
கூறினார். 

மெய்ம்மையானும்   என்றது,  ஊரானோர்   தேவகுலம்   என்றாற்
போலத் தொறு என்பதன் பொருட்டாய் நின்றது. 

இச்சூத்திரத்திற் கூறியன   எல்லாம்  முற்றப்பெறுவனவுங்  குறையப்
பெறுவனவும் வினையியலுள் விரித்து ஓதியவற்றான் உணர்க.       (31)

மேலதற்கு ஒரு புறனடை

428. எவ்வயின் வினையும் அவ்வியல்* நிலையும். 

இது, மேலதற்கு ஒரு புறனடை.

(இ-ள்.) பெயரெச்சமும், அவ்வியல் நிலையும்-அம்முற்று இயல்பிலே
நிற்கும், எ-று. 

என்றது,  இறப்புப்பற்றி வருவனவும், இறப்பும் நிகழ்வும் பற்றி வருவ
னவும்,  எதிர்வுபற்றி  வருவனவும்,  முக்காலமும் பற்றி  வருவனவுமாம்
என்றவாறு. 

வினையெச்சங்களுள்     உகரமும் ஊகாரமும்  எனவும்  முன்னும்
கடையும்  இறப்பும்,  புகரமும்  பின்னும்  இறப்பும் நிகழ்வும்,  இயரும்
இயவும்  இன்னுங்  குகரமும்  எதிர்வும்,  அகரமும்  காலும்   வழியும்
இடமும்  முக்காலமும்  பற்றி வந்தவாறும்; பெயரெச்சங்களுள் உம் ஈறு
நிகழ்வும் எதிர்வும், அகர ஈறு இறப்பும்பற்றி வந்தவாறுங் காண்க. 

இருவகை     எச்சத்திற்குங் ‘காலமொடு  வரூஉம்   வினைச்சொல்
எல்லாம்’  (203) என்ற பொதுவிதியான் முக்காலமும் ஒன்றற்கு வருமோ
என்னும் ஐயம் நிகழ்ந்ததனை இச்சூத்திரத்தான அகற்றினார். ஆசிரியர்
அவற்றிற்கு   ஓதிய  வாசகங்களான்  அவற்றிற்கு  உரிய  காலங்களும்
உணர்த்தினாராலெனின்,   அவ்வாசகங்களாற்  காலம்  உணராதவையும்
உளவாகலின்   அவையும்  விளங்குதற்கு  ஈண்டுக்  கூறினார்  என்று
உணர்க. 

சேனாவரையர்,     வினை என்றது முதல்நிலை  என்று  பொருள்
உரைத்து,     அவையும்     முற்றுச்சொற்போல    முற்றி    நிற்கும்
என்றாராலெனின்,     அம்    முதல்நிலை    படுத்தல்    ஓசையான்
பெயர்த்தன்மைப்பட  நிற்குமாறும்,  எடுத்தல்  ஓசையான்  முன்னிலை
ஏவல்  ஒருமை  வினை  முற்றாய்  நிற்குமாறும்  ‘இர் ஈர் மின்’ (226)
என்னுஞ் சூத்திரத்துள் கூறினாம். 

முற்று     இலக்கணங் கூறுதற்கு இடையே இச்சூத்திரத்தான்  எச்ச
இலக்கணத்தைக்  கூறினார், ‘பருந்து விழுக்காடாக’ மாட்டேறிற்று என்று
கருதி.