|
வினைமுற்றுப் பெயரொடு முடிதல்
429.
அவைதாந்
தத்தங் கிளவி அடுக்குந வரினும்
எத்திறத் தானும் பெயர்முடி பினவே.
இது, முற்றுச்சொற்கு முடிபு கூறுகின்றது.
(இ-ள்.) அவைதாம்-முற்கூறிய
முற்றுச்சொற்கள்தாம், தத்தங்கிளவி
அடுக்குந வரினும்-தத்தமக்கு உரிய வாய்பாடுகள்
பலவாய் அடுக்கி
வரினும் (உம்மையான், அடுக்காது ஒன்றே வரினும்), எத்திறத்தானும்
பெயர் முடிபின-எல்லாவற்றானும் பெயர்ச் சொல்லை முடிபாக உடைய,
எ-று.
(எ-டு.) உண்டான்
தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன், நல்லன்
அறிவுடையன் செவ்வியன் சான்றோர்மகன்
எனவும், வந்தான் வழுதி,
கரியன் மால் எனவும் வரும்.
எத்திறத்தானும்
என்றதனான், உண்டான்
சாத்தன், சாத்தன்
உண்டான், என முன்னும் பின்னும்
பெயர் நிற்றலும், ‘நின்றான்
இருந்தான் கிடந்தான்தன் கேள்
அலறச் சென்றான் (நாலடி.29). என
அடுக்கிப் பெயர் வெளிப்படாது
நிற்றலும், ‘முப்பஃதென்ப’ (1) என
அடுக்காது பெயர் வெளிப்படாது நிற்றலுங்
காண்க.
ஈண்டு இலேசான் கொண்டது முடிக்கும் பெயர் வெளிப்படாது நின்ற
தற்கு என்றும், ‘எவ்வயிற் பெயரும்’
(69) என்னுஞ் சூத்திரத்தான்
கொண்டது முடிக்கப்படும் பெயர் வெளிப்படாது நின்றதற்கு என்றும்
உணர்க.
வேற்றுமைச் சொல்
என வேறு ஒரு சொல்லின்றி முற்றும் எச்சமும்
வேற்றுமையை விரிக்குமாறுபோல, எழுவாயும்
பயனிலையும் என
வேறொரு சொல்லின்றி எச்சமும் முற்றும் எழுவாயும் பயனிலையுமாய்
நிற்குமென்றும் உணர்க.
முற்றுப்
பெயர் கொண்டல்லது தாமாக முற்றி
நில்லாமைக்குக்
காரணம் ‘அவற்றொடு வருவழி’ (237) என்னுஞ் சூத்திரத்துள் கூறினாம்.
(33)
எச்சங்கட்குப் பெயர் முதலியன
430.
பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
எதிர்மறை உம்மை எனவே சொல்லே
குறிப்பே இசையே ஆயீ ரைந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி.
இது,
முற்கூறிய எச்சச்சொற்கட்கு முடிபு கூறுவான்,
அவற்றின்,
பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது.
(இ-ள்.) நெறிப்படத்
தோன்றும் - முன்னர் எடுத்து
ஓதிய
இடங்களிலே முறைமைப்படத் தோன்றும், பிரிநிலை வினையே பெயரே
ஒழியிசை எதிர்மறை உம்மை எனவே
சொல்லே குறிப்பே இசையே
ஆயீரைந்தும் - பிரிநிலை முதல் இசை ஈறாகிய
அப்பத்தும், எஞ்சு
பொருட்கிளவி-எச்சச்சொல் என்று பெயராம், எ-று.
எஞ்சி நிற்பதொரு பொருளையுடைய
சொல்லெனவே, எச்சச் சொல்
என்று பெயராயிற்று. இப்பத்தோடும் எச்சம்
என்பதனைக் கூட்டுக.
இவற்றுள் பிரிநிலை எச்சம் முதலிய
ஏழும் எச்சச்சொல் வந்து
முடித்தலை உடைய; ஏனைய மூன்றும் அச்சொல் வந்து முடியா என்று
உணர்க.
வினையெச்சமும்
|