நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   785
Zoom In NormalZoom Out


என்றால், ஒன்றிய முடிபாகாது. 

எனவே,    எச்சப்பொருட்கும்   உம்மையை   முடிபாகக்   கூறாது
அதனொடு  தொடர்ந்த  வினை  முடிபாமாறு   கூறவே,  உண்ணின்ற
பொருள் முடிபு கூறாது சொல் முடிபு கூறுதலே ஆசிரியர் கருத்தாயிற்று.
ஆகவே,   முற்   கூறியவற்றிற்குஞ்   சொல்முடிபே   கூறினாராயிற்று.
‘வேங்கையும்   ஒள்ளிணர்    விரிந்தன,    நெடுவெண்    டிங்களும்
ஊர்கொண்டன்றே.’   (அகம்.2:16,17)    என்பது,   இணர்   விரிதலும்
ஊர்கோடலும்   மணஞ்  செய்யும்  காலங்  குறித்தலின்,  அவை  ஒரு
வினையே ஆம். 

இனி,  எஞ்சுபொருட்கிளவி  செஞ்சொல்  ஆயவழியும்  தன்வினை
கோடல்  ‘தன்னினம்  முடித்த’லாற்  கொள்க.  அது, ‘சாத்தன் வந்தான்
கொற்றனும் வந்தான், வரும்’ என்பதாம். (40) 

எச்சவும்மையது கால மயக்கம்

437. தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை
நிகழுங் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலை யான.
 

இதுவும் அவ்வெச்சவும்மையது கால மயக்கம் கூறுகின்றது. 

தன்மேற்  செஞ்சொல்  வரூஉங்காலை  -  அவ்வும்மை  எச்சத்தின்
முன்னர்  முடிக்குஞ்  சொல்  உம்மைஇல்  சொல்லாய்  வருங்காலத்து,
நிகழும் காலமொடு வாராக் காலமும் - நிகழ்காலத்தோடு எதிர்காலமும்,
இறந்த காலமொடு வாராக் காலமும் - இறந்த காலத்தாடு எதிர்காலமும்,
மயங்குதல் வரையார் முறைநிலையான - மயங்குதலை நீக்கார் அவ்வாறு
மயங்கும் முறைமைக்கண், எ-று. 

(எ-டு.) கூழ்  உண்ணாநின்றான் சோறும் உண்பன், கூழ் உண்டான்
சோறும் உண்பன் என வரும். ‘முறை நிலை’ என்றதனான், சிறுபான்மை
நிகழ்வோடு  இறப்பும்  மயங்குதல்  கொள்க.  கூழ்  உண்ணாநின்றான்
சோறும் உண்டான் என வரும். (41) 

எனவென் எச்சத்தின் முடிபு

438. எனவென் எச்சம் வினையொடு முடிமே. 

இஃது, எனவென் எச்சம் ஆமாறு கூறுகின்றது. 

(இ-ள்.) எனவென்  எச்சம்-முன்னர்  வினையுங் குறிப்பும் இசையும்
பண்பும் எனக் கூறிய நால்வகையவாகிய எனவென் எச்சம், வினையொடு