நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2264
Zoom In NormalZoom Out


இவ்வாறிருந்ததெனக்   கூறப்படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே
நுகர்ந்து  இன்பமுறுவதொரு பொருளாதலின் அதனை அகம் என்றார்.
எனவே   அகத்தே   நிகழ்கின்ற   இன்பத்திற்கு  அகமென்றது  ஓர்
ஆகுபெயராம்;

இதனை ஒழிந்தன,ஒத்த அன்புடையார்தாமே யன்றி எல்லாார்க்குந்
துய்த்துணரப்  படுதலானும்,  இவை இவ்வாறிருந்த வெனப் பிறர்க்குக்
கூறப்படுதலானும்,   அவை  புறமெனவே படும்.  இன்பமே  யன்றித்
துன்பமும்  அகத்தே நிகழுமாலெனின், அதுவும் காமங் கண்ணிற்றேல்
இன்பத்துள்  அடங்கும்.  ஒழிந்த துன்பம் புறத்தார்க்குப் புலனாகாமை
மறைக்கப்படாமையிற்      புறத்திணைப்      பாலதாம்.     காமம்
நிலையின்மையான் வருந் துன்பமுந் ‘தாபதநிலை’ ‘தபுதாரநிலை’ யென
வேறாம்.   திணையாவது   ஒழுக்கம்;  இயல்:  இலக்கணம்;  எனவே,
அகத்திணையியலென்றது         இன்பமாகிய       ஒழுக்கத்தினது
இலக்கணமென்றவாறாயிற்று.     இவ்வோத்துக்கள்    ஒன்றற்கொன்று
இயைபுடைமை அவ்வவ்வோத்துக்களுட் கூறுதும்.

இனி,   இச் சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனிற்  கூறக்  கருதிய
பொருளெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: கைக்கிளை முதலா - கைக்கிளை யெனப் பட்ட
ஒழுக்கம் முதலாக; பெருந்திணை இறுவாய் - பெருந்திணை யென்னும்
ஒழுக்கத்தினை   இறுதியாகவுடைய   ஏழனையும்; முற்படக்  கிளந்த
எழுதிணை  என்ப  -  முற்படக் கூறப்பட்ட அகத்திணை யேழென்று
கூறுவர் ஆசிரியர் எ-று.

எனவே,       பிற்படக்       கூறப்பட்ட       புறத்திணையும்
ஏழுளவென்றவாறாயிற்று.   எனவே,   இப்பதினான்கு மல்லது  வேறு
பொருளின் றென வரையறுத்தா ராயிற்று. அகப்புறமும் அவை தம்முட்
பகுதியாயிற்று.    முதலும்   ஈறும்   கூறித்   திணை   யேழெனவே
‘நடுவணைந்திணை’ உளவாதல் பெறுதும். அவை மேற் கூறுப.

கைக்கிளை     யென்பது   ஒருமருங்கு  பற்றிய கேண்மை. இஃது
ஏழாவதன் தொகை. எனவே, ஒருதலைக் காமமாயிற்று. எல்லாவற்றினும்
பெரிதாகிய   திணை   யாதலின்   பெருந்திணையாயிற்று.  என்னை?
எண்வகை  மணத்தினுள்ளும்  கைக்கிளை  முதல்  ஆறு  திணையும்
நான்கு   மணம்   பெறத்  தானொன்றுமே  நான்கு  மணம்  பெற்று
நடத்தலின்.   பெருந்திணையிறுவாய்  -  பண்புத்தொகைப்   புறத்துப்
பிறந்த    அன்மொழித்தொகை.   முற்படக்   கிளந்தவென   எடுத்த
லோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த ஏழுதிணை யுளவாயின.