நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2266
Zoom In NormalZoom Out


யுலகத்திற்கிடையிடையே,

‘‘முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்.’’
                            
(சிலப். காடு. 54. 56)

என     முதற்பொருள் பற்றிப் பாலை  நிகழ்தலானும், நடுவணதாகிய
நண்பகற்  காலந் தனக்குக் காலமாகலானும், புணர்தற்கும் இருத்தற்கும்
இடையே     பிரிவு     வைத்தலானும்,    உலகியற்    பொருளான
அறம்பொருளின்பங்களுள்     நடுவணதாய    பொருட்குத்    தான்
காரணமாகலானும், நடுவணதெனக் குணம் காரணமாயிற்று.

பாயிரத்துள்     எல்லை  கூறியதன்றி ஈண்டும் எல்லை கூறினார்,
புறநாட்டிருந்து     தமிழ்ச்செய்யுள்     செய்வார்க்கும்     இதுவே
இலக்கணமாமென்றற்கு.

இவ்விலக்கணம்,   மக்கள்  நுதலிய அகனைந்திணைக்கே யாதலின்
இன்பமே நிகழுந் தேவர்க்காகாது.

‘காமப் பகுதி கடவுளும் வரையார்’. (தொல். பொருள். 83)

என்பது புறம்.

நடுவணாற்றிணை  யென்னாது  ஐந்திணை  யென்றார்,  பாலையும்
அவற்றோ  டொப்பச்  சேறற்கு. இத்திணையை மூன்றாக மேற்பகுப்பர்.
                                                       (2)

நடுவணைந்திணைப் பகுப்பு
 

3. முதல்கரு வுரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை.
 

இது நடுவ ணைந்திணையைப் பகுக்கின்றது.

(இ-ள்.)  பாடலுள்  பயின்றவை   நாடும்   காலை  -  புலனெறி
வழக்கிடைப்  பயின்ற  பொருள்களை  ஆராயுங் காலத்து; முதல் கரு
உரிப்பொருள் என்ற மூன்றே-முதலுங் கருவும் உரிப் பொருளும் என்ற
மூன்றேயாம்;  நுவலுங்  காலை  முறை  சிறந்தனவே  -  அவைதாம்
செய்யுள் செய்யுங்கால் ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடைய எ-று.

இங்ஙனம்  பாடலுட் பயின்ற பொருள் மூன்றெனவே, இம் மூன்றும்
புறத்திணைக்கும்   உரியவென்பது   பெறுதும்.   அது   புறத்திணைச்
சூத்திரங்களுள்,  ‘வெட்சி  தானே  குறிஞ்சியது  புறனே’ (56) என்பன
முதலியவற்றாற் கூறுப.

முதலிற்     கருவும், கருவின் உரிப்பொருளுஞ் சிறந்துவரும். இம்
மூன்றும்  பாடலுட்  ‘பயின்று’  வருமெனவே  வழக்கினுள் வேறுவேறு
வருவன அன்றி ஒருங்கு நிகழாவென்பதூஉம், ‘நாடுங் காலை’ யெனவே
புலனெறிவழக்கிற்  பயின்றவாற்றான்   இம்மூன்றனையும் வரையறுத்துக்
கூறுவதன்றி    வாக்குநோக்கி   இலக்கணங்   கூறப்படாதென்பதூஉம்
பெறுதும், ‘நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்’ (தொல்.
பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்வி