கன்மிசைச் சிறுநெறி’’
(அகம்.128)
எனவும்,
‘‘அவ்வய னண்ணிய வளங்கே ழூரன்’’
(அகம்.26)
எனவும்,
‘‘கானலுங் கழறாது மொழியாது’’
(அகம்.170)
எனவும் நால்வகை யொழுக்கத்திற்கு நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க. (5)
முல்லைக்குங் குறிஞ்சிக்கும் உரி பெரும்பொழுதும் சிறுபொழுதும்
|
இது
முதலிரண்டனுள் நிலங் கூறிக் காலங்கூறுவான்
முல்லைக்குங் குறிஞ்சிக்கும் பெரும்பொழுதுஞ்
சிறுபொழுதுங் கூறுத னுதலிற்று. தொ. பொ. நச்.(1)7
(இ-ள்)
காரும் மாலையும் முல்லை - பெரும்பொழுதினுட் கார்காலமுஞ் சிறுபொழுதினுள் அக்காலத்து மாலையும் முல்லையெனப்படும்;
குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர் - பெரும் பொழுதினுட்
கூதிர்காலுமுஞ் சிறுபொழுதினுள் அதன் இடையாமமுங் குறிஞ்சி யெனப்படும் எ-று.
முதல் கரு உரிப்பொருளென்னும் மூன்று பாலுங்கொண்டு ஒரு திணையாமென்று கூறினாரேனும், ஒரு பாலினையுந் திணையென்று அப்பெயரானே கூறினார், வந்தான் என்பது உயர்திணை என்றாற்போல. இது மேலனவற்றிற்கும் ஒக்கும். இக்காலங்கட்கு விதந்து ஒரு பெயர் கூறாது வாளா கூறினார், அப்பெயர் உலகவழக்காய் அப்பொருள் உணர நிற்றலின். காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின், அதனை
இம்முறையானே அறுவகைப் படுத்து, இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார். இனி ஒரு நாளினைப் படுசுடரமையந் தொடங்கி மாலையெனவும்,
அதன்பின் இடையாமமெனவும், அதன் பின் விடிய லெனவும், அதன்பின்
காலை யெனவும், அதன் பின் நண்பக லெனவும், அதன்பின்
எற்பாடெனவும் ஆறாகப் பகுத்தார். அவை ஒரோவொன்று பத்து நாழிகையாக இம்முறையே சூத்திரங்களுட் சிறுபொழுது வைப்பர். பின்பனியும் நண்பகலும் பிற்கூறிய காரணம் அச்சூத்திரத்து கூறுதும்.
முல்லைக்குக்
காரும்
மாலையும் உரியவாதற்குக் காரணமென்னையெனின், பிரிந்து மீளுந் தலைவன்றிறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின்றான் திறங்கூறுவனவெல்லாம் பாலையாயும் வருதலின், அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்குந்
தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன், விரைபரித்தேரூர்ந்து
|